அ.தி.மு.க .கொறடா எஸ்.பி. வேலுமணி பேசுவதை கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தனது பதில் உரையை வழங்கியதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.
சட்டசபையில் இன்று ஒவ்வொரு கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் தொகுதி பிரச்சினை பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து தனது போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேச தொடங்கினார். அப்போது அ.தி.மு.க. கொறடா எஸ்.பி. வேலுமணி எழுந்து ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இல்லை என்றார். ஆனால் அவர் பேச சபாநாயகர் அப்பாவு அனுமதிக்கவில்லை. எஸ்.பி.வேலுமணியின் மைக் இணைப்பும் வழங்கப்படவில்லை. என்றாலும், எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து பேசினார். இதற்கிடையே எஸ்.பி. வேலுமணி பேசுவதை கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தனது பதில் உரையை வழங்கத் தொடங்கினார்.
அதே சமயத்தில் எஸ்.பி. வேலுமணியும் மைக் இணைப்பு இல்லாமல் பேசிக்கொண்டே இருந்தார். இதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு குரல் எழுப்பினார்கள். முதல்வர் பேசுகிறார். உட்காருங்கள் என்று குரல் கொடுத்தனர். ஆனாலும், எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து பேசினார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் வெளிநடப்பு செய்வதாக கூறினார்.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாகவும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். இதற்கு சபாநாயகர் அதிருப்தியை பதிவு செய்தார்.
சபாநாயகர் அப்பாவு இதுகுறித்து கூறுகையில், ‘ஜனநாயக முறையில் நான் இந்த அவையை நடத்தி வருகிறேன். நான் சுதந்திரமாக செயல்படுகிறேன். ஆனால் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்வதை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்களது வெளிநடப்பு ஏற்புடையது அல்ல’ என்று கூறினார்.