தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்காமலேயே பா.ஜ.க.வில் இருந்து கொத்துக் கொத்தாக அ.தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில்தான் கர்நாடக மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகிவருகிறார்கள்!

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் அதானி தொகுதியில் போட்டியிட சீட் வழங்குமாறு அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான லட்சுமண் சவதி கேட்டார். ஆனால் அவருக்கு சீட் நிராகரிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள மகேஷ் குமட்டள்ளிக்கு அக்கட்சி சீட் வழங்கியுள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த லட்சுமண் சவதி பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளார். அவர் நேற்று தனது எம்.எல்.சி. பதவியையும் ராஜினாமா செய்தார்.

கர்நாடக மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதற்கு முன்னதாக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரை பெங்களூருவில் நேரில் சந்தித்து தான் காங்கிரசில் சேர விரும்புவதாக கூறினார். இதை அக்கட்சி தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் நேற்று மாலை பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் லட்சுமண் சவதி கட்சியில் சேரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, டி.கே.சிவக்குமார் ஆகியோரின் முன்னிலையில் லட்சுமண் சவதி காங்கிரசில் சேர்ந்தார். அவருக்கு கட்சி கொடியை வழங்கி காங்கிரசில் சேர்த்து கொண்டனர். அதைத்தொடர்ந்து டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில்,

‘‘பா.ஜனதாவில் இருந்து விலகிய லட்சுமண் சவதி தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று(நேற்று) காங்கிரசில் சேர்ந்துள்ளார். வட கர்நாடகத்தில் பலம் வாய்ந்த தலைவராக இருக்கிறார். பா.ஜனதா தலைவர்கள் அவருக்கு டிக்கெட் வழங்கவில்லை. அவர் எந்த விதமான நிபந்தனையும் விதிக்காமல் கட்சியில் சேர்ந்துள்ளார்’ என்றார்.

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறுகையில், ‘‘அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரின் தலைமையை ஏற்று லட்சுமண் சவதி காங்கிரசில் சேர்ந்துள்ளார். அவரை நாங்கள் வரவேற்கிறோம். 40 சதவீத கமிஷன் விவகாரத்தால் பா.ஜனதா அரசு இந்த முறை 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது’’ என்றார்.

இதையடுத்து லட்சுமண் சவதி பேசுகையில், ‘‘நான் பா.ஜனதாவில் 25 ஆண்டுகள் இருந்தேன். அந்த கட்சியில் இருந்து விலகி இன்று (நேற்று) காங்கிரசில் சேர்ந்துள்ளேன். எனது தொகுதி மக்கள், காங்கிரசில் சேரும்படி கூறினார். அதனால் காங்கிரசில் சேர்ந்துள்ளேன். பா.ஜனதாவில் எப்படி பணியாற்றினேனோ அதே போல் காங்கிரசிலும் கட்சிக்கு விசுவாசமாக பணியாற்றுவேன். கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நான் தோல்வி அடைந்தேன். கட்சி மேலிட தலைவர்கள் என்னை அழைத்து எம்.எல்.சி. ஆக்கி துணை முதல்-மந்திரி பதவி வழங்கினர்.

பின்னர் என்னை கட்சியில் இருந்து நிராகரித்து, துணை முதல்-மந்திரி பதவியையும் பறித்து, அதானி தொகுதியில் டிக்கெட் கொடுக்காமலும் ஏமாற்றி அவமதித்து விட்டனர். சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்’’ இவ்வாறு லட்சுமண் சவதி கூறினார்.

மேலும் பேசிய கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, ‘‘அம்பேத்கரின் கொள்கைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளில் பின்பற்றப்படுகின்றன. ஆனால் பா.ஜனதா அவரது கொள்கைகளை அவமதித்துள்ளது. கர்நாடகத்தில் போலி இட ஒதுக்கீடு வழங்கி அம்பேத்கருக்கு அவமரியாதை இழைக்கப்பட்டுள்ளது.மேலும், பா.ஜனதா இரட்டை என்ஜின் அரசு, கர்நாடக மக்களுக்கு இரட்டை துரோகம் செய்துள்ளது. கர்நாடக அரசின் இட ஒதுக்கீடு முடிவுக்கு அரசியல் சாசன ரீதியாக உரிய அங்கீகாரம் கிடைக்காது. அம்பேத்கரின் ஜெயந்தியை கொண்டாடும் இந்த நேரத்தில் கர்நாடக மக்களுக்கு இந்த பா.ஜனதா அரசு பெரிய துரோகத்தை செய்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட சமூகங்களின் மக்கள் அரசை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள்.
இட ஒதுக்கீடு உயர்வு நிலை பெற வேண்டுமெனில் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் திருத்தம் செய்ய வேண்டும். இந்த முயற்சியை பா.ஜனதா மேற்கொள்ளாதது ஏன்?. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எப்போதும் பொய் பேசுகிறார். பா.ஜனதா நாளுக்கு நாள் செல்வாக்கை இழந்து வருகிறது. அக்கட்சியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் விலகியுள்ளனர். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெறும்’’ இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பா.ஜ.க. நிர்வாகிகள் விலகுவதற்கு காரணம் யார்… பா.ஜ.க.வில் என்ன நடக்கிறது என்று மூத்த அரசியல் தலைவர்கள் சிலரிடம் பேசினோம்.

எடுத்த எடுப்பிலேயே, ‘‘சார், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைதான் காரணம்’’ என்று சொல்லி நம்மை அதிர்ச்சியடைய வைத்தனர். மேலும் அவர்கள் நம்மிடம், ‘‘சார், ஒரு விஷயம், அண்ணாமலை தன்னை ஒரு மகாராஜா போல் நினைத்துக் கொண்டு சர்வாதிகாரியாக செயல்பட முயற்சிக்கிறார். அரசியலில் அது எடுபடாது என்று விரைவில் உணர்வார் அல்லது கார்நாடக தேர்தல் முடிவுகள் அவருக்கு உணர்த்தும்.

உதாரணமாக, ஊழலுக்கு எதிராக கட்சித் தொடங்கியவர் அரவிந்த் கெஜ்ரிவால், அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்… ஆனால், ‘அரசியல்’ செய்வதில் கைதேர்ந்துவிட்டார் கெஜ்ரிவால்… இவர் மீது அண்ணா ஹசாரேவே குற்றஞ்சாட்டி வருகிறார். காரணம், அரசியல் வேறு… ‘மகாராஜா’ போல் நினைத்துக்கொள்வது வேறு… ஊழலை ஒழிப்பேன்… என்று கூறிக்கொண்டு ஒரு தலைபட்சமாக செயல்படுவது வேறு..!

சமீபத்தில் வேலூரில் நடந்த கூட்டத்தில் தி.மு.க.வின் மூத்த தலைவர் துரைமுருகன், ‘அரசியலுக்கு வந்துவிட்டால் வெட்கம்… மானம்… சூடு… சொரனை… எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் அரசியலுக்கு வரக்கூடாது…’ என்பார். (இதை மேடையிலேயே பேசினார்).

ஆனால், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தான் ‘ஸ்டண்ட்’ அடிப்பது போலவே கர்நாடகத்திலும் அடித்து, அங்கு பா.ஜ.க. கூடாரத்தை காலி செய்துவிட்டார். அதாவது, அரசியலில் மூத்த தலைவர்கள் அல்லது அவர்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்க வேண்டும். ஆனால், மிகவும் நேர்மையுடன் செயல்படுகிறேன் என்று சொல்லி, முக்கிய நிர்வாகிகளுக்கு சீட் கொடுக்காமல், அவர்கள் இன்று காங்கிரஸ் கட்சிக்கு தாவி வருகின்றனர். இதனால், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் சுலபமாக வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது.

தமிழகத்திலும், ஆளும் தி.மு.க.வை எதிர்ப்பது சரி, அ.தி.மு.க.வையும் எதிர்த்துக்கொண்டு இருக்கிறார். அ.தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டு எத்தனை வாக்குகளை வாங்குவார் அண்ணாமலை என்பதை சிந்தித்தாரா… ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் இவரை அல்லது பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்திவிடுவார்களா தமிழக மக்கள்!

ஓரு விஷயம், அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. ‘முதலில் பா.ஜ.க.வுக்கு எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை அண்ணாமலை சொல்லட்டும்’ என்ற வார்த்தையை அடிக்கடி உதிர்த்துவருகிறார் செந்தில் பாலாஜி! உண்மைதான் அ.தி.மு.க., தி.மு.க. ஏன், அ.ம.மு.க.விற்கு இருக்குமளவு கட்சியில் கிளைக்கழக நிர்வாகிகள் பி.ஜே.பி.க்கு இருக்கிறார்களா..?

இந்த உண்மையை எல்லாம் உணராமல், ஆடியோ… வீடியோவை வைத்து அரசியல் செய்து ஆட்சியைப் பிடிக்கலாம் என நினைத்தால், அண்ணாமலை தான் ஏமாறுவதுமட்டுமல்ல, பி.ஜே.பி. தலைமையையும் ஏமாற்றுகிறார் என்பதுதான் நிதர்சனம்’’ என்றனர்!

அண்ணாமலை அரசியலில் ‘பாலபாடம்’ படிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறதோ..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal