தி.மு.க.விற்கு எதிராக பா.ஜ.க. பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் நிலையில், மொடக் குறிச்சியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றார். மேலும் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் நல்ல சிவன் அ.தி.மு.க.வோடும், பா.ஜ.க.வோடும் மறைமுக கூட்டணி வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் என்ன நடக்கிறது என நடுநிலையான உடன் பிறப்புக்களிடம் பேச்சுக்கொடுத்தோம். அவர்கள் அப்படியே கொந்தளித்து, அவர்களுடைய ஆதங்கத்தை நம்மிடம் கொட்டினார்கள்.

அதாவது, ‘‘சார், தி.மு.க.வைப் பொறுத்தளவிற்கு மாவட்டச் செயலாளர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தலைமை வழங்கும். ஆனால், ஈரோடு வடக்கு மாவட்டச்செயலாளர் நல்ல சிவனுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை தலைமை. மாறாக ஒன்றியச் செயலாளர் கேப்டன் துரைக்கு பவானி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது தி.மு.க. தலைமை!

தனக்கே சீட்டு இல்லை. இவர் எப்படி வெற்றி பெறுவார் என்று பார்த்துவிடுகிறேன் என சூளுரைத்த நல்ல சிவன் உள்ளடி வேலை செய்து தோற்கடித்தார். கடந்த அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் அமைச்சராக இருந்த கே.சி.கருப்பண்ணனுக்கும் இவருக்கும் மறைமுக தொடர்பு உண்டு. அ.தி.மு.க. ஆட்சிகாலத்திலேயே, பினாமிகள் பெயரில் காண்ட்டிராக்ட் எடுத்து வலம் வந்தவர்தான் நல்ல சிவன்!

அதற்கு கைமாறாக, தற்போது தி.மு.க. ஆட்சியில் கே.சி.கருப்பண்ணனுக்கு நெருக்கமானவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்து வருகிறார் நல்லசிவன்! இவர்களின் மறைமுக கூட்டணியால் பவானி தொகுதியில் தி.மு.க. அதல பாதாளத்திற்கு இன்றைக்கு சென்று விட்டது!

அதே போல், அந்தியூர் தொகுதியில் போட்டியிட்ட ஏ-.ஜி.வெங்கடாச்சலத்தையும் மறைமுகமாக அ.தி.மு.க.வுடன் கைகோர்த்து தோற்கடிக்க முயற்சித்தவர்தான் நல்லசிவன்! இவருக்கு எதிராகவும் உள்ளடி வேலைகளை செய்தார். ஆனால், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெங்கடாச்சலம் வெற்றி பெற்றார்! இது தொடர்பாக இருவருமே தலைமைக்கு புகார் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கோபிசெட்டிப் பாளையத்திலும் அ.தி.மு.க. வேட்பாளர் செங்கோட்டையன் வெற்றி பெற தி.மு.க.வில் நடந்த உள்ளடிவேலைகள்தான் காரணம்!

அதே போல் பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இங்கும் தி.மு.க.வில் நடந்த உள்ளடி வேலைகள்தான் காரணம். ஆனாலம், பெருந்துறையில் இன்னும் உள்ளடி வேலைகள் தொடர்கிறது. பெருந்துறை தொகுதியில் பணிகள் படுமோசமாக இருக்கிறது. உறுப்பினர் சேர்க்கை என்பது பெயரளவுக்கு கூட கிடையாது. ஆலோசனைக் கூட்டம் என்றால் 10 பேர் 15 பேர் என்று தான் வருகின்றனர். தெருமுனை பிரச்சாரம் நடத்தினால் 30 பேரை வைத்து நடத்துகிறார்கள். குன்னத்தூர் பேரூராட்சியில். ஆளுங்கட்சி கவுன்சிலர் மீது பி சி ஆர் சட்டத்தில். வழக்கு பதிவு செய்து, தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார்.

இதனை எல்லாம் தட்டிக் கேட்பதற்கு கூட ஆள் இல்லை. பெருந்துறை பேரூராட்சியில் தலைவர் ஒருவரை தவிர, அனைத்து கவுன்சிலர்களும் தலைவருக்கு எதிராக போர் கொடி தூக்கி வருகிறார்கள். பேரூராட்சி தலைவர் மீது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இதே நிலை தொகுதியில் பல இடங்களில் இருக்கிறது. மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான முத்துசாமி தொகுதி பக்கம் வருவதே இல்லை. கட்சி நிர்வாகிகளை கட்டுக்கோப்பாக ஒன்றினைத்து வழிநடத்துவதே கிடையாது’’ என்றனர்.

மேலும் நம்மிடம் ஆதங்கத்தை கொட்டிய உடன் பிறப்புக்கள், ‘‘தி.மு.க.வில் முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரகுமார், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் ஆகியோர் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டனர். இதற்கு காரணம் தொகுதி அமைச்சர்தான்!

அதே போல் மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் குணசேகரன் அமைச்சருக்கு வலது கரமாக இருக்கிறார். இவருக்கு சொந்த வார்டிலேயே செல்வாக்கு இல்லை. பேரூராட்சி தேர்தலில் தனது சொந்த வார்டில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். தி.மு.க.வில் காலம் காலமாக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்விக்கு இவர்தான் காரணம். இதனால்தான், இங்கு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. அதே போல் மாநகரச் செயலாளர் சுப்பிரமணி மீதும் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. இவர் அமைச்சருக்கு இடதுகரமாக இருக்கிறார்கள். இவர்களால்தான் இன்றைக்கு தி.மு.க. அதலபாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது!

எனவே, முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு, உரிய விசாணை நடத்தி நடவடிக்கை எடுத்தால்தான், ஈரோட்டில் தி.மு.க. வளரும். இது தொடர்பாக நிர்வாகிகள் அறிவாலயத்திற்க தொடர்ந்து புகார்களை அனுப்பியும் தலைமை இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்றனர்!

நெருப்பில்லாமல் புகையுமா..? நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal