அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு நீதிபதி குமரேஷ் பாபு தடைவிதிக்காதது ஏன் என்பது குறித்த தீர்ப்பின் சாராம்சம் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இரட்டை நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கில் அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லும் என்ற இரட்டை நீதிபதிகளின் தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம் அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் அணுகலாம் என தீர்ப்பளித்தது.
அதிமுக பொதுக் குழு வழக்கின் தீர்மானங்களை எதிர்த்தும் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்தும் ஓபிஎஸ் தரப்பு ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில் அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் செல்லும். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க எந்த தடையும் இல்லை என குறிப்பிட்டது. மேலும் ஓபிஎஸ்ஸின் மனுக்களை தள்ளுபடி செய்தும் கோர்ட் உத்தரவிட்டது.
அதிமுகவிலிருந்து தான் நீக்கப்பட்டது சட்டவிரோதம் என ஓபிஎஸ் வாதாடிய நிலையிலும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அதிமுக பொதுக் குழு வழக்கின் நீதிபதி கூறிய தீர்ப்பின் விவரம் பின்வருமாறு:
- அதாவது கட்சி விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ள போதும், கட்சியின் அடிப்படை கட்டமைப்புக்கு மாறாக திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும், எந்த அதிகாரமும் இல்லாமல் ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்பட்டதால் தீர்மானங்கள் அடிப்படை முகாந்திரம் அற்றவை பன்னீர்செல்வம் தரப்பினர் முன் வைத்த வாதங்களை ஏற்க முடியாது. ஏனென்றால் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், 2 ஆயிரத்து 460 உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே.
- பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானமும், இடைக்கால பொதுச்செயலாளர் நியமித்த தீர்மானங்களும் செல்லும்.
- பன்னீர்செல்வம் தரப்பினரின் வாதங்களை ஏற்று தீர்மானங்களுக்கு தடை விதித்தால் மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் கட்சியை நிர்வகிக்க வேண்டி வரும். இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் கட்சி செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்படும்.
- பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்த சிறப்பு தீர்மானத்தை பொறுத்தவரை, அதை பிரதான வழக்கில் தான் தீர்மானிக்க முடியும். தற்போதைய நிலையில் ஏழு நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. இருப்பினும், சிறப்பு தீர்மானத்துக்கு இடைக்கால தடை விதித்தால் அது ஒரு கோடியே 55 லட்சம் தொண்டர்களை கொண்ட கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்பதால் தடை விதிக்க முடியாது.
- பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்தால், கட்சியை வழி நடத்த தலைவர் இல்லாமல் கட்சி பெரிதும் பாதிக்கப்படும். தீர்மானங்களுக்கும், தேர்தலுக்கும் தடை விதித்தால் ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதுடன், கட்சியின் செயல்பாட்டையும் பாதிக்கும். அதனால் தீர்மானங்களுக்கும், தேர்தலுக்கும் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றன. இவ்வாறு அதிமுக பொதுக் குழு தீர்மான வழக்கின் தீர்ப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே இரட்டை அமர்வு நீதிபதிகளிடம் ஓ.பி.எஸ். உடனடியாக மேல் முறையீடு செய்திருக்கிறார். இன்று தீர்ப்பு வந்த அடுத்த சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதால், அதற்கு இடைக்கால தடை என்பதற்கு வாய்ப்பில்லை. மேலும் ஓ.பன்னீர் செல்வம் நீக்கியதற்கான காரணத்தையும் எடப்பாடி தரப்பு தெளிவாக நீதிமன்றத்தில் வாதத்தை வைத்திருக்கிறது.
அதாவது, ‘பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் போது, அ.தி.மு.க. அலுவலகத்தை ஓ.பி.எஸ். தலைமையில் சூறையாடியதால்தான் நீக்கினோம்’ என்று தெளிவாக கூறியிருக்கிறார்கள். எனவே, மேல்முறையீட்டிலும், ஒரு மாபெரும் இயக்கத்தை முடக்குவது போல் தீர்ப்பு வர வாய்ப்பில்லை. எனவே, எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்பிருக்கிறது.