தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், நாளை வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த கூட்டமானது வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனையடுத்து குடும்பத்தலைவிகளுக்கான மாதாந்திர உதவி தொகை, மெட்ரோ ரயில் திட்டம், பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு அறையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட அலுவல் ஆய்வு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்தும், எந்த தேதியில் மானிய கோரிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறுகையில், நாளைய தினம் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும், தொடர்ந்து மார்ச் 23,24,27,28 ஆகிய தேதிகளில் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற இருப்பதாக கூறினார்.
மார்ச் 29 ஆம் தேதி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும், இதனை தொடர்ந்து அதன் மீதான விவாதங்கள் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.
காலை, மாலை என இரு வேளைகளில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். வருகிற 29 ஆம் தேதி நீர்வளத்துறை மானிய கோரிக்கையும், 30 ஆம் தேதி நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளது என தெரிவித்தார். ஏப்ரல் 11 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட இருப்பதாக தெரிவித்தார். இந்த நாட்களில் தினந்தோறும் கேள்வி நேரம் இடம்பெறும் எனவும் சபாநாயகர் அப்பாவு கூறினார்.