நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து தங்க, வைர நகைகள் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த இவருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்களும் உள்ளனர். தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்தாண்டு விவாகரத்து பெற்று பிரிந்ததை அடுத்து ஐஸ்வர்யா தனது மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் ஐஸ்வர்யாவின் வீட்டில் தங்க, வைர நகைகள் திருடு போய் உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஐஸ்வர்யா சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த புகாரில், தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.3.6 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் காணாமல் போனதாகவும், இதுதொடர்பாக தனது வீட்டின் பணியாளர்கள் மூன்று பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த நகைகள் அனைத்தும் தனது திருமணத்தின் போது வாங்கப்பட்டவை என்றும், 18 ஆண்டுகளாக பாதுகாத்து வந்த அந்த நகைகளை கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தனது தங்கை சௌந்தர்யாவின் திருமணத்தின் போது பயன்படுத்திவிட்டு லாக்கரில் வைத்ததாகவும், அதன்பின் அந்த லாக்கரை திறக்காமல் வைத்திருந்த ஐஸ்வர்யா, கடந்த பிப்ரவரி 10-ந் தேதி திறந்து பார்த்தபோது தான், அதில் இருந்த நகைகள் காணாமல் போய் இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாராகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்திலும், நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலிலும் நடிக்கின்றனர். தற்போது லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal