ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெளிமாவட்ட தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள் வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திருச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருவதுதான் ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.
இது பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.
‘‘சார், ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டில் (பூத் எண் 109) திருச்சி மாவட்ட முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்கள் வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வயதானவர்கள் உற்றசாகமாக இரட்டை விரலைக் காட்டி, ‘எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான்’ என்றும் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக வீடு வீடாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும், பெட்ரோல் பங்குகளில் வேலை செய்கிறவர்கள், பெட்ரோல் போட வருகிறவர்கள் என வாக்கு சேகரிப்பை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். இவர்களது பிரச்சாரம் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றது’’ என்றனர்.
ஈரோடு கிழக்கு நிலவரம் குறித்து ஜெ.சீனிவாசனிடம் பேசினோம்.
‘‘ சார், கடந்த பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் ஈரோடு கிழக்கில் நிறைவேறியிருக்கிறது. தி.மு.க. ஆட்சியமைந்து 21 மாதங்கள் ஆகிய நிலையில் ஒரு திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. தேர்தல் தேதி அறிவித்தவுடன் சாலைகளை சீரமைப்பது, விசைத்தறி உரி¬மாளர்களுக்கு பொய்யான வாக்குறுதி கொடுப்பது என, குறுக்கு வழியில் வாக்காளர்களை ஏமாற்ற நினைக்கிறது தி.மு.க.! இளைஞர்கள் – இளம்பெண்கள் மற்றும் வயதானர்கள் எங்களுக்கு மிகுந்த வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியில் 55 லட்சம் மடிக்கணினிகள், 65 லட்சம் மிதிவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. தாலிக்கு தங்கம், ஸ்கூட்டி, கறவை மாடுகள், ஆடுகள் என பல உதவிகள் மக்களுக்கு செய்யப்பட்டன. ஆனால் தி.மு.க. அரசு அனைத்தையும் நிறுத்திவிட்டது. மாறாக வீட்டு வரி, மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. எனவே தி.மு.க. அரசை எச்சரிக்கும் விதமாக தேர்தல் அமையட்டும். அ.தி.மு.க.வை மக்கள் ஆதரிக்க வேண்டும். திண்டுக்கல் இடைத்தேர்தல் எம்.ஜி.ஆருக்கும், மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி தேர்தல்கள் ஜெயலலிதாவுக்கும், ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் எடப்பாடி யாருக்கு திருப்பு முனையாக அமையும்’’ என்றார்.
எடப்பாடியாருக்கு திருப்பு முனையாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!