ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. அ.தி.மு.க. வாக்குகள் சிதறும் என்று எண்ணிய நிலையில், அ.தி.மு.க. வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அப்படியே அள்ள இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தங்களது கௌரவ பிரச்னையாக பார்க்கிறது தி.மு.க. தலைமை. கிட்டத்தட்ட 25&க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கிழக்கு தொகுதியில் முகாமிட்டிருக்கிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தளவில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக இருப்பவர்கள் ‘செங்குந்த முதலியார்கள்’! அ.தி.மு.க. கூட்டணியில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரும் இரட்டை இலைக்கு ஆதரவாக, அதாவது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்கு கேட்டதால், தேர்தல் களம் ‘டஃப் ஃபைட்’டாக மாறியது.

இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கில் நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார் முதல்வரின் மனசாட்சியாக செயல்படும் மருகன் சபரீசன்! ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள தொழிலபதிகள், வியாபாரிகள் சங்கத் தலைவர்கள், நெசவாளர்கள் சங்கத் தலைவர்கள் உள்பட முக்கியத் தலைவர்களை சந்தித்திருக்கிறார்.

அதே போல், ஈரோட்டில் இருக்கும் கல்வித் தந்தைகள் மற்றும் செங்குந்த மகாஜன சங்க முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார் சபரீசன்! ஈரோடு மேட்டுக்கடையில் உள்ள ஒரு மாஹாலில் ரகசிய கூட்டம் நடந்திருக்கிறது. சில நிமிடங்கள் சங்கத்தலைவர்களிடம் பேசியிருக்கிறார் சபரீசன். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்திருக்கிறார். அதன் பிறகு இடைத்தேர்தல் முடியட்டும் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஜவுளி வியாபரிகள் சங்கத்தினர் உள்பட பலரை சந்தித்திருக்கிறார் சபரீசன். இந்த சந்திப்பின் போது தி.மு.க.வினர் யாரும் உடன் இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி மட்டும் உடன் இருந்ததாக தகவல்கள் கசிகிறது. அதே போல், செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவரையும் சந்தித்து பேசியிருக்கிறார் சபரீசன். இந்த நிலையில்தான் அச்சங்கத்தின் மாநில தலைவர் கே.பி.கே.செல்வராஜ் தி.மு.க.விற்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்.

கடந்த பத்தாம் தேதி செய்தியாளர்களை சந்தித்த கே.பி.கே.செல்வராஜ், ‘தி.மு.க. என்ற கட்சி மறைந்த முதல்வர் அண்ணாவால் தொடங்கப்பட்டது. அவர் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் மறைந்த பிறகு நாங்கள் எந்தக்கட்சியிலும் பதவி கேட்கவில்லை. இருந்தாலும் நாங்கள் தி.மு.க.விற்கு ஆதரவளிக்கிறோம்’ என கூறியிருக்கிறார். ஈரோடு கிழக்கில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் தி.மு.க.விற்கு ஆதரவு கொடுத்ததன் பின்னணியில் சபரீசன் இருக்கிறார்.

ஆக மொத்தத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஆபரேஷனை சக்சஸாக முடித்திருக்கிறார் சபரீசன்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal