ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் வருகிற 26.1.2023 ஆம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா திடீர் மரணத்தை தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் அணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த இடைத்தேர்தலில் பாஜகவும் களம் இறங்க இருப்பதாக தகவல் வெளியானது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இருவரும் தனித்தனியாக போட்டியிடுவதால் இரட்டை இலை முடக்கப்பட்டு, வாக்குகள் சிதறும் நிலையும் ஏற்படும். எனவே ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பாஜக மற்றும் ஓ.பி.எஸ். அணியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் 27.2.2023 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 23.1.2023 – திங்கட் கிழமை முதல் 26.1.2023 – வியாழக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, விண்ணப்பக் கட்டணத் தொகையாக 15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) ரூபாயை செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal