கொங்கு மண்டலத்தில் ‘செங்கோட்டை’யனை தகர்த்தெறிந்துவிட்டு ஜெயலலிதாவின் மனதில் இடம் பிடித்தவர்தான் தோப்பு வெங்கடாச்சலம்! தற்போது இவர் தி.மு.க.வில் ஐக்கியமாகியும் மனவருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது!

முன்னாள் அமைச்சர் பெருந்துறை தோப்பு வெங்கடாசலம், அதிமுகவில் ஒரு சீனியர்.. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது இவருக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி அழகுபார்த்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க.வில் நடந்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த அதிருப்தியில் கொஞ்ச காலம் அ.தி.மு.க.வில் இருந்து விலகியே இருந்தார் தோப்பு வெங்கடாச்சலம்!

கடந்த எம்பி தேர்தலில் கோபிசெட்டிபாளையம், பவானி தொகுதியைவிட, அவருடைய பெருந்துறை தொகுதியில் திமுகவின் வாக்குகள் குறைவாக பதிவாகி இருந்தது.. இதற்கு காரணம், சாட்சாத் தோப்பு வெங்கடாசலத்தின் கடினமான உழைப்புதான். ஆனாலும், உட்கட்சி பூசல் என்னவோ தொகுதிக்குள் நிலவி கொண்டுதானிருந்தது. குறிப்பாக, மாஜி அமைச்சர் கருப்பண்ணனுடனான மோதலும் நீடித்தது. அன்று, தோப்பு வெங்கடாசலம் கையில் இருந்த சுற்றுச்சூழல் துறை பறிக்கப்பட்டு கருப்பண்ணனிடம்தான் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதலே இருவருக்கும் இடையே முட்டல் மோதல்கள் இருக்கின்றன. (தற்போது கருப்பண்ணன் எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் அமைதியாக இருக்கிறார்!)

ஒருகட்டத்தில், கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தோப்பு வெங்கடாசலம் கடிதமும் எழுதியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு சீட் தரப்போவதில்லை என்ற தகவல் கசிந்தது.. அதுமட்டுமல்ல, கருப்பணன் ஆதரவாளரான ஜெயகுமாருக்கு சீட் கிடைத்ததுமே அதிர்ந்து போன தோப்பு வெங்கடாசலம், நான் என்ன தப்பு செய்தேன் என்று கதறி கதறி அழுத நிகழ்வுகள் எல்லாம் அப்போது நடந்தது. ஆனால், இதற்கு பிறகுதான் தோப்பு திறன்பட செயல்பட்டார்.

திடீரென சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்வதாக அறிவித்து எடப்பாடிக்கே ஷாக் தந்தார். காரணம், தன்னை நம்பிய பெருந்துறை தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்புடனேயே இருந்து வருவதால், இப்படி ஒரு அதிரடியை கையில் எடுத்தார். இதில் போதுமான வெற்றி தோப்புக்கு கிடைக்கவில்லை என்றாலும், செல்வாக்கை வலுவாகவே தொகுதிக்குள் தக்க வைத்தார். இதையடுத்துதான், இவர் திமுகவில் இணைய முயற்சிகளை எடுத்தார். இதற்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பின்னணி இருப்பதாக முணுமுணுக்கப்பட்டது.

அதிமுகவின் பிரபலமான முகங்கள், அதாவது “பிராண்டு” நபர்கள், கட்சியின் திமுகவில் இணைய மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். அந்தவகையில், தோப்பு வெங்கடாசலம் கடந்த ஜூலை 11ம்தேதி அறிவாலயத்தில், தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது, தோப்பு வெங்கடாசலம் பேசும்போது, “நாங்கள் ‘நிதி’யைத் தேடி வரவில்லை. நாங்கள் ‘உதயநிதி’யை தேடி வந்திருக்கிறோம். நீதி இங்குதான் இருக்கிறது என்று வந்திருக்கிறோம். ஈரோடு மாவட்டத்திலிருந்து 900-க்கும் மேற்பட்டோர் இப்போது இணைந்துள்ளனர். இது மணியோசை தான். தலைவர் அனுமதியும், ஒரு மாதம் அவகாசமும் கொடுத்தால் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 25 ஆயிரம் பேரை திமுகவில் இணைப்போம்” என்று கெத்தாக கூறினார் தோப்பு வெங்கடாசலம்.

இந்த நிகழ்வுக்கு பிறகு, அதிமுகவின் கோட்டையான கொங்குவை தன் பக்கம் திமுக சாய்த்து வருகிறது. அதிமுக, பாஜகவின் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்ந்து வலைவீசி, அதில் வெற்றியும் பெற்று வருகிறது. மாற்று கட்சியில் இருந்து வந்த பலருக்கு திமுகவில் மிகப்பெரிய பொறுப்புகள் தரப்பட்டு வரும் நிலையில், எனினும், தோப்புவை திமுக எந்த அளவுக்கு பயன்படுத்தி கொண்டது என்று தெரியவில்லை.. 2 தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், பொறுப்புகள், பதவிகள் பெரிதாக தரவில்லை என்றே தெரிகிறது.. அதனால்தானோ என்னவோ, தோப்பு தற்போது அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. மேலும், அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

ஆனால் அந்த தகவலுக்கு தோப்பு வெங்கடாசலம் உடனடி மறுப்பு தெரிவித்துள்ளார். “பாஜகவில் நான் இணையும் தகவலை யாரும் நம்ப வேண்டாம்” என்றும் உறுதிபட சொல்லி உள்ளார்.. என்றாலும் இப்படி ஒரு வதந்தி, திடீரென கிளம்ப காரணம் என்ன? தோப்பு நிஜமாகவே அதிருப்தியில் இருக்கிறாரா? அல்லது பாஜகவே இதை கிளப்பி விட்டுள்ளதா? என்று தெரியவில்லை. ஆனால், திமுகவின் அதிருப்தியாளர்களுக்கு தூண்டிலை வீசி, தமிழக பாஜக தன்பக்கம் இழுத்து வரும் வேலையில், கொங்கு மண்டலத்தில், அதுவும் சொந்த தொகுதி மக்களிடம் நன்மதிப்பை பெற்ற தோப்பு போன்ற சீனியர்கள் இருந்தால், அது திமுகவுக்கே பலம் தரும் என்பதும் யதார்த்த உண்மையே. தோப்புவை திமுக இழக்கிறதா? அல்லது பாஜக முந்திக்கொள்கிறதா? என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்!

ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் கட்சிகாக பல வருடங்கள் உழைத்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தி.மு.க.விலிருந்து விலகியது ‘இழப்புதான்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal