தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன் நிர்வாகிகளின் கனவு ‘கானல்’ நீராகிவிட்டது. இதனால், பல மாவட்டங்களில் ஒன்றியச் செயலாளர்கள் முதல்வர் மாவட்ட துணை அமைப்பாளர்கள் வரை விரக்தியில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில்தான், வேலூர் மாவட்டம் பொன்னையில் தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில்,

‘‘ தமிழகத்தில் நிதிநிலை கடும் நெருக்கடியில் உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அதனை சமாளித்து வருகிறோம். நிதி நெருக்கடியிலிருந்து மீட்கும் பணிகள் படிப்படியாகத்தான் நடக்கும். அதுவரையில் கட்சியினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும்’’ என்றார். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார். முன்னதாக பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.40 கோடியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்.பி. உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘‘தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதியானது. தற்போதாவது மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதலை அளிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம். அவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அதன் பின்னர் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது தெரியும். தமிழக கவர்னர் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார்’’ இவ்வாறு அவர் கூறினார்.

நிதி நெருக்கடிக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் என்ன சம்பந்தம் எந்தக் கட்சி புதிதாக ஆட்சிக்கு வருகிறதோ, அந்தக் கட்சி ‘கஜானாவை முன்பு ஆட்சி செய்தவர்கள் காலி செய்துவிட்டார்கள்’ என்று கூறுவது வழக்கம்தான். மேலும் நிதி நெருக்கடியை சமாளிக்க வேண்டிய பொறுப்பு நிதித்துறை அமைச்சருக்கு இருக்கிறது. இதில் தி.மு.க. நிர்வாகிகள் என்ன செய்ய முடியும்! எனினும், நிதி நெருக்கடியை கொஞ்சம் சமாளியுங்கள் என்று துரைமுருகன் நிர்வாகிகளிடம் ஓபனாக பேசியிருப்பதுதான் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

தி.மு.க.வின் மூத்த நிர்வாகியான துரைமுருகனின் புலம்பல் பற்றி, வருவாய்த்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், அதாவது ஊராட்சி ஒன்றியங்களில் தார் சாலை, மண் சாலை, ஆற்று புறம்போக்கு இடங்களில் சாலை அமைப்பது போன்ற வேலைகளில் ஒன்றியச் செயலாளர், சேர்மன்களுக்கு அதிகளவில் கமிஷன் கிடைக்கும். தற்போது நிதி பற்றாக்குறையால், அத்தியாவசியமான முக்கியமான பணிகளுக்கே நிதியை முழுவதுமாக ஒதுக்க முடியவில்லை.

‘சம்பாதிக்க முடியவில்லையே?’ என கட்சி நிர்வாகிகள் வெறுத்துப் போய் இருந்தனர். இந்த நிலையில்தான், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ‘விரைவில் நிதிநிலை சரியாகிவிடும்!’ எனக் கூறி ஊக்கப்படுத்தியிருக்கிறார் துரைமுருகன்’’ என்றனர்!

இவ்வளவு கடுமையான நிதி நெருக்கடியிலும், ‘இனோவா’ புதிய காரில் நிர்வாகிகள் வலம் வருவது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு தெரியாமல் போனதுதான் வருத்தமளிக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal