திருச்சி புறநகர் பகுதிகளில் ‘கலப்பு உரம்’ தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரும் அவதியுற்று வருகின்றனர்.

கடந்த ‘தமிழக அரசியல்’ வார இதழில் தூத்துக்குடியைச் சேர்ந்த ‘ஸ்பிக்’ உரக் கம்பெணி செயற்கை உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது என்று இரண்டு பக்க கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில்தான் திருச்சி புறநகர் பகுதிகளான, மண்ணச்ச நல்லூர், முசிறி, குளித்தலை, உப்பிலியபுரம் போன்ற பகுதிகளில் கலப்பு உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

‘கலப்பு உரம்’ தட்டுப்பாடு பற்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பேசினோம்.

‘‘சார், தமிழகம் முழுவதும் இந்தாண்டு பருவமழை பொழிந்து விவசாயில் நாற்று நடவு செய்திருக்கின்றன. குறிப்பாக காவிரிக் கரையோரப் பகுதிகளான திருச்சி புறநகர் பகுதிகளில் பயிர் நடவு முடிந்து களை எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

வயலில் களை எடுப்பதற்கு முன்பு ‘கலப்பு உரத்தை’ போடுவது வழக்கம். அப்போதுதான் பயிர் செழித்து, நன்றாக தூர் கட்டி விளைச்சல் கொடுக்கும். ஆனால், துறையூர், உப்பிலியபுரம் போன்ற பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் கலப்பு உரம் கிடைக்க வில்லை. உர விலைகள் விண்ணைத் தொட்டாலும், வேறு வழியின்ற வாங்கி போட்டுத்தான் ஆகவேண்டும்.

ஆனாலும், ‘கலப்பு உரம்’ உரக்கடைகளில் கிடைக்கவில்லை. தனியார் உரக்கடைகளின் நிலைதான் இப்படி என்றால், வேளாண் கூட்டுறவு சொசைட்டிகளிலும் கலப்பு உரங்கள் கிடைக்கவில்லை. உப்பிலியபுரம், துறையூர், ஒக்கரை, சிக்கத்தம்பூர் உள்ளிட்ட வேளாண் சொசைட்டிகளில் ‘கலப்பு உரம்’ கிடைக்கவில்லை. எனவே தமிழக அரசு உரத்தட்டுப்பாட்டை போக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்க்க வேண்டும்’’ என்றனர்.

தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal