தனி நாட்டை விலைக்கு வாங்கி நித்தியானந்தா வசித்து வருவதாக கூறப்படும் கைலாஸாவில் அதிக சம்பளத்துடன் வேலை வழங்குவதாக விளம்பரம் வெளியாகியுள்ளது!

நான் தான் கடவுள், பரமசிவத்தின் அவதாரம் என கூறி கொண்டவர் நித்யானந்தா. இவர் பெங்களூர் பிடதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வந்தார். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு, கடத்தல் வழக்கு இருந்ததால் அதில் கைதாகிவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தார்.

இதனால் நேபாளம் வழியாக வெளிநாட்டிற்கு தப்பி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் அவர் நேபாளத்தை விட்டு தப்பியிருக்க முடியாது என சிலர் கூறுகிறார்கள். இந்த நிலையில் தான் கைலாசா எனும் ஒரு தீவை வாங்கிவிட்டதாக தெரிவித்திருந்தார். கைலாசாவுக்கான தனிகொடி, தனி பாஸ்போர்ட், தனி கரென்சி என அறிவிப்புகளை அள்ளி வீசினார். அது போல் இந்து நாடுகளுடன் மட்டுமே பொருளாதார ஒப்பந்தங்களை வைப்பேன் என்றும் கூறியிருந்தார். மேலும் கைலாசாவில் தொழில் தொடங்க தமிழ் நாட்டினருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதிலும் குறிப்பாக மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். மதுரையில் உள்ள ஹோட்டல் கடை, துணிக் கடை உரிமையாளர்கள் கைலாசாவில் தொழில் தொடங்க அனுமதி கேட்டு நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதியிருந்த செய்திகள் வைரலாகின. இப்படியிருக்கும் நிலையில் கைலாசாவில் வேலைவாய்ப்பு என்ற விளம்பர போஸ்டர் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் உள்ள பல்வேறு கைலாசா கிளைகளில் தகுந்த சம்பாவனையுடன் அதாவது சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு என்று ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளது. ஓராண்டு ஊதியத்துடன் கூடிய பயிற்சிக்கு பிறகு வெளிநாட்டு கைலாசாக்களில் பின்வரும் துறைகளில் வேலை வாய்ப்பு: நித்யானந்தா இந்து பல்கலைக்கழகம் கைலாசாவின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆலயங்கள் கைலாசா ஐடி விங் கைலாசா அயல்நாட்டு தூதரகம் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு உணவு, மருத்துவ வசதி, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் என இரு போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசுப் பணி எட்டாக் கனியாக இருப்பதால், வெளிநாட்டு வேலை மோகத்தல் இளைஞர்கள் இதுபோன்ற விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்!

இந்த விளம்பரத்தை நம்பி பலர் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் போனை எடுக்கக் கூட ஆள் இல்லை என தகவல் வெளியாகிறது. மோசடி கும்பல் இந்த ஏமாற்று வேலையில் ஈடுபட்டிருக்கிறதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal