தமிழகத்தில் பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை எனவும் தன்னை பற்றி அவதூறு பேசிய திமுக பேச்சாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த குஷ்பு திமுக அமைச்சர்கள் நிர்வாகிகள் என அனைவருமே பெண்களை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாகவும் விமர்சித்தார்.

தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை அடையாறில் பாஜக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மற்றும் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்பூ ‘‘தமிழக முதலமைச்சர் தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் பால் விலை மின்கட்டண விலையை குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்ததும் பால் மற்றும் மின் கட்டண விலையை உயர்த்திவிட்டதாக குற்றம் சாட்டினார். மக்களைப் பற்றி கவலைப்படாத ஒரு அரசாங்க திமுக அரசு செயல்பட்டு வருவதாக விமர்சித்தார்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பெண்கள் பல்வேறு வகைகளில் ஆட்சியாளர்களால்,அமைச்சர்களால் அவமானப்படுத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளகளுக்கு பேட்டியளித்த அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு முன்பில் இருந்தே ஜிஎஸ்டி இருந்தது. ஆனால் தற்போது திமுக ஆட்சியாளர்கள் தமிழகத்தில் மின்கட்டணம் பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை செய்துவிட்டு மத்திய அரசின் மீது பழி சுமத்துவதாக தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கையில் கூறியபடி திமுக அரசு எந்த அறிவிப்பையும் செயல்படுத்தவில்லையென கூறியவர், தமிழக மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என தெரிவித்தார். பெண்கள் இழிவுபடுத்துவதை பார்த்து சிரித்து கொண்டிருக்கும் மனநிலை தான் திமுக அமைச்சர்களின் நிலை அதனை யாரும் தட்டிக் கேட்க கூட முன்வரவில்லை’’ எனவும் குஷ்பு குற்றம் சாட்டினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal