திண்டுக்கல் அருகே காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க ஓபிஎஸ், இபிஎஸ் அனுமதி கேட்டு இருந்தனர். இருவரையும் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இரு தரப்பை சேர்ந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், ஒருவரை ஒருவர் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த செப்.20ம் தேதி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தார். அதே சமயம் பிரதமர் மோடியை சந்திக்க முடியாமல் விரக்தியில் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாராம். ஆனால், கடைசி வரை அவரும் பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை. இந்நிலையில், திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 11ம் தேதி வருகிறார். அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகம் வரும் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காக, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் தங்களுக்கு வேண்டிய நபர்கள் மூலம் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தை நாடியுள்ளார்கள்.
ஆனால், தற்போது வரை அவர்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து எவ்வித சம்மதமும் கொடுக்கவில்லையாம். இதனால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடும் விரக்தியில் இருந்து வருகிறார்கள். எனினும் மோடியை சந்திக்க வேண்டும் என்ற முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்தித்து விட வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்ட முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும், இதைப்போல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை சந்திக்க தீவிர முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், பிரதமர் மோடி தரப்பில் ஓபிஎஸ், இபிஎஸ்சை சந்திக்க விருப்பம் இல்லை என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து டெல்லி பாஜ நிர்வாகி ஒருவர் கூறுகையில்,”திண்டுக்கல் வருகை தரும் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், இருவரும் மீண்டும் ஒன்று சேர்வதாக இருந்தால் மட்டும் என்னை நேரில் பார்க்க வர வேண்டும் என மோடி கண்டிப்புடன் கூறி விட்டாராம்.
இந்த தகவல் இருவரிடமும் தெரிவிக்கப்பட்டதாம். இதையடுத்து, பிரதமர் மோடியை சந்திக்க முடியாவிட்டாலும், நவ.12ம் தேதி சென்னை வரும் அமித்ஷாவை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக சந்திக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால், இருவரையும் சந்திப்பது அல்லது சந்திக்க மறுப்பது அமித்ஷா கையில்தான் இருக்கிறது” என்றார்.
எடப்பாடி பழனிசாமி தன் பிடிவாதத்தை விட்டுக்கொடுக்காததால், பிரதமர் மோடியும் சந்திப்பதற்தற்கு பிடிகொடுக்காமல் இருக்கிறார். இதற்கிடையே டி.டி.வி.தினகரன் தன்னை சந்திக்க மறுத்ததால், ஓ.பி.எஸ்.ஸும் தவித்து வருகிறார்!