திரைப்பட உலகில் 25 ஆண்டுகளாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய், தனது பிறந்த வயது 49 என்பதை நம்ப முடியாதவராக இருக்கிறார். சமீபத்தில் ஒரு திரைப்படத்துக்காக அவர் எடுத்துக் கொண்ட படத்துடன் இந்த கருத்தை ஐஸ்வர்யா ராய் பகிர்ந்திருக்கிறார்.
பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கதாநாயகிகள் மீது ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இங்கு அறிமுகமாகும் பெண்களை விட வடக்கத்திய ஹீரோயின்களைக் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.
ரத்தி, மாதவியில் ஆரம்பித்து மதுபாலா, பல்லவி, ரூபிணி, மும்தாஜ், ரீமா சென், லைலா, ஜுகி சாவ்லா, நக்மா, ஜோதிகா, கஜோல், மனிஷா கொய்ராலா, மல்லிகா ஷெராவத், சோனியா அகர்வால், காஜல் அகர்வால், குஷ்பு, தபு, இஷா கோபிகர், ராணி முகர்ஜி, ஊர்மிளா, ஷில்பா ஷெட்டி, ஜெனலியா, இலியானா, ஹன்ஸிகா மோத்வானி, சமீபத்திய வரவான சித்தி இத்னானி வரை ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.
இவர்கள் எல்லோருமே தமிழ், மற்றும் தெலுங்கு, கன்னட திரை உலகில் குறைந்த பட்சம் ஐந்து முதல் பத்தாண்டுகளாவது பிசியாக இருந்தவர்கள். இதில் குஷ்புவும் ஜோதிகாவும் தமிழ்நாட்டின் மருமகள்களாகவே மாறி சென்னையிலேயே செட்டிலாகி இரண்டு குழந்தைகளுக்கும் தாயாராகி விட்டவர்கள்!
இதில் ஐஸ்வர்யா ராய் மட்டும் சினிமாவில் அறிமுகமாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆனாலும் அவர் கதாநாயகியாக படங்களில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இதே நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி (1973) பிறந்த ஐஸ்வர்யா, தன் 21ஆம் வயதில் 1994ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர். முதலில் அவரை கதாநாயகியாக தமிழுக்கு அறிமுகம் செய்தவர் இயக்குநர் மணிரத்னம். அவரது ;இருவர்’ (1997) படத்தில் பிரபல நடிகையும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா பாத்திரத்தில், எம் ஜி ஆராக நடித்த மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.
அதன் பின்னர் எஸ், தாணுவின் தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’, ஷங்கரின் ஜீன்ஸ், ரஜினியுடன் எந்திரன், விக்ரமுடன் ராவணன் போன்ற படங்களில் தன் முத்திரையைப் பதித்திருந்தார். கூடவே இந்தி உட்பட பலமொழிப் படங்களிலும் அவரது நடிப்பாற்றல் வெளிப்பட்டது.
2017இல் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானாலும் நடிப்பு ஆர்வம் அவரை விடவில்லை. அது இந்த வருடம் வெளியான மணிரத்னத்தின் ‘பொன்னியில் செல்வன்’ வரைக்கும் அதாவது, அவர் திரைக்கு வந்து சுமார் 25 வருடங்கள் பூர்த்தியான பொன்விழா ஆண்டு வரை அவரை ஒரு சிறந்த நடிகையாக நீடிக்கச் செய்திருக்கிறது.
பல மொழிகளில் ஐஸ்வர்யா நடித்திருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் மணிரத்னம்தான் தன்னுடைய குரு என்கிறார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யாவின் வாழ்க்கை, கல்கியின் பொன்னியின் செல்வனைப் போலவே ஒரு தொடர்கதை போல நீள்கிறது. கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட ஐஸ்வர்யா ராய்க்கு, துளுதான் தாய்மொழி. அவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. எனவே, அங்குள்ள ஆர்யா வித்யா மந்திரில் பள்ளிப் படிப்பையும், மட்டுங்காவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிகிரியையும் முடித்திருக்கிறார்.
படித்துக் கொண்டே க்ளாசிக்கல் டான்ஸ், மியூஸிக் என ஐந்து வருடங்கள் பயிற்சி பெற்றிருந்தாலும் ஒரு மருத்துவராக வேண்டும் என்பதுதான் ஐஸ்வர்யா ராயின் ஆசையாக இருந்திருக்கிறது. ஆனால் 1991-ல் மாடலிங் துறையில் நுழைந்த பிறகு அவரது வாழ்க்கை ஏறுமுகம்தான். ஃபோர்டு கம்பெனி நடத்திய போட்டியில் இண்டர் நேஷனல் சூப்பர் மாடலாக தேர்வானார். அதன் பின்னர் அமீர்கானுடன் நடித்த பெப்சி விளம்பரம் பிரபலமாகிறது. அடுத்து உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடிய, அதுவும் பிரபலமான பெண்ணுக்கு வரும் சர்ச்சைக்குரிய செய்திகளையெல்லாம் கடந்து வந்தவர்தான் ஐஸ்வர்யா ராய். ஆரம்பத்தில் சல்மான்கானுடன் அவருக்கு ஏற்பட்ட நெருக்கம். பிரிவு, அது சம்பந்தமாக மீடியாக்களில் வந்த கிசுகிசுக்கள், அதில் இருந்த உண்மைகள் எல்லாம் அப்போது அவருக்கு மன உளச்சலை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் கடந்துவந்து திருமணம். குழந்தைகள் என்று செட்டிலாகி விட்டார். தன்னம்பிக்கை மிகுந்த அவரைத் தேடி ஒரு நடிகையாக நல்ல படங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அவர் இன்னும் பல வருடங்கள் நடித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் எல்லோரது விருப்பமும்!