திமுக துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக நேற்று கோவை சென்ற கனிமொழி எம்.பி.க்கு, அங்கு மேளதாளங்கள் முழங்க மிக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன.

கோவை மாவட்ட மக்கள் தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழிக்கு சிறப்பாக வரவேற்பை கொடுத்து திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள். இது பற்றி கோவை மாவட்ட உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், கோவை விமான நிலையத்தில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் வரவேற்பு ஏற்பாடுகளை தடபுடலாக செய்திருந்தனர். இதனிடையே மகளிரணி நிர்வாகிகள் பெருமளவில் திரண்டு வந்து வரவேற்று கனிமொழியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுகவில் துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நேற்று கோவைக்கு சென்றார். தனியார் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த அவருக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எத்தனையோ முறை கனிமொழி கோவை வந்திருந்தாலும் கூட இன்று தரப்பட்ட வரவேற்பை போல் இதற்கு முன் தந்ததில்லை.

அந்தளவுக்கு கோவை விமான நிலையத்தில் திமுகவினர் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதேபோல் மகளிரணி நிர்வாகிகள் பெருமளவில் தன்னை வரவேற்க வந்திருந்ததால் கனிமொழி மிகுந்த உற்சாகம் அடைந்தார். வெறுமனே கையை அசைத்துவிட்டு காரில் ஏறிச் செல்லாமல் தன்னை சந்திப்பதற்காக கால் கடுக்க காத்திருந்தவர்களை சந்தித்த பிறகே கார் ஏறினார் கனிமொழி. இவரது இந்த அணுகுமுறை கட்சியினர் மத்தியில் அவருக்கு கூடுதல் நற்பெயரை ஈட்டிக் கொடுத்துள்ளது.

கோவையில் தனக்கு இப்படியொரு வரவேற்பு கொடுப்பார்கள் என்பதை சற்றும் எதிர்பார்க்காத கனிமொழி எம்.பி. நெகிழ்ந்து போனார். இதனிடையே பொறியியல் கல்லூரியில் இளைஞர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.கோவை தங்கம் இல்லம் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். குட்டி காவலர் திட்டத்தின் தொடக்க விழாவை ஒட்டி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னையில் இருந்ததால் கனிமொழியை வரவேற்க அவர் கோவை விமான நிலையம் வரவில்லை.

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கனிமொழியை வரவேற்க கோவை விமான நிலையம் வந்திருந்தார். நேற்று தூத்துக்குடி, இன்று கோவை என அடுத்தடுத்து பயணங்களில் பிசியாக உள்ள கனிமொழிக்கு திமுக தொண்டர்களும், அடிமட்ட நிர்வாகிகளும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியின் கோட்டைக்கு கனிமொழி வந்து சென்றதுதான் உ.பி.க்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது!’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal