‘குண்டு வீசுவதால் பா.ஜ.க.வினரின் மன தைரியத்தை குறைத்துவிட முடியாது’ என்று சமீபத்தில்தான் அண்ணாமலை பேசியிருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான கார்கள் பெட்ரோல் குண்டு வீசி தமிழகத்தில் தாக்கப்பட்டு வருகின்றனர்!
கோவை, பொள்ளாச்சியில் பா.ஜனதா அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். மேலும் கார், ஆட்டோக்களையும் உடைத்து சென்றனர். இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜனதா, இந்து முன்னணி அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் மற்றும் வழிபாட்டு தலங்கள், தலைவர்கள் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விடிய விடிய ரோந்தும் சுற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மூலப்பாளையம் பகுதியில் பா.ஜனதா பிரமுகர் தட்சிணாமூர்த்தி என்பவர் பர்னிச்சர் கடைக்குள் மர்ம நபர்கள் பெட்ரோல் வீசி ஜன்னல் வழியாக தீ வைத்து வீசினர். இதில் கடைக்குள் மேஜை மற்றும் ஜன்னல் லேசாக எரிந்து அணைந்து விட்டது. இதுபற்றி தெரிய வந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பா.ஜனதா பிரமுகரின் கார் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி 4-வது வீதியை சேர்ந்தவர் சிவசேகர் (51). இவர் பு.புளியம்பட்டி நகர பா.ஜனதா பிரச்சார அணி முன்னாள் துணை தலைவராக பதவி வகித்தார். தற்போது இவர் பா.ஜனதாவில் இருந்து கொண்டு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 5 கார்களை தனது வீட்டிற்கு அருகில் உள்ள காலி இடத்தில் நேற்று இரவு நிறுத்தி இருந்தார்.
இந்நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு சிவசேகர் வெளியே ஓடி வந்தார். அப்போது கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் பு.புளியம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் மற்ற 4 கார்களும் தப்பியது. இதுபற்றி தெரிய வந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி.க்கள் நீலகண்டன், சேகர், இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், குருசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் யாரோ காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அக்கம் பக்கத்தில் கண்காணிப்பு கேமரா இருக்கிறதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே தடயவியல் நிபுணர்களும் தீ வைத்து எரிக்கப்பட்ட காரை சோதனை செய்தனர்.
இது தொடர்பாக பா.ஜனதா பிரமுகர் சிவசேகர் பு.புளியம்பட்டி போலீசில் காருக்கு தீ வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்தார். பா.ஜனதா பிரமுகர் காருக்கு தீ வைத்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் திரண்டனர்.
இதனால் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து பு.புளியம்பட்டி நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 200 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.