சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பா.ஜ.க. கட்டுப்பாட்டில் உள்ளதாக ராகுல்காந்தி எம்.பி. அதிரடி குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

இன்று மூன்றாவது நாளாக பாதயாத்திரையில் மேற்கொண்டுள்ள தக்கலை செல்லும் வழியில் புலியூர்குறிச்சியில் ராகுல் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், ‘‘நாட்டில் அனைவருக்கும் ஒரு கருத்து உள்ளது. நடைபயணம் குறித்து பா.ஜ.க,உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை வரவேற்கிறேன். மக்களை ஒன்று சேர்க்க, இந்தியாவின் ஒற்றுமைக்காகவே யாத்திரை மேற்கொண்டுள்ளேன். பா.ஜ.க., கொள்கைகளினால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் பிரிவினைக்கு எதிராக இந்த யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் உறுப்பினர் என்ற முறையில் அதில் பங்கேற்றுள்ளேன்.

சிபிஐ உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பா.ஜ.க, கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வருமான வரித்துறை அமலாக்கத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்து செயல்படுகிறது. இந்த யாத்திரை பாஜக அரசு இயந்திரத்தை எதிர்க்கும் யாத்திரையாக மாறியுள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மையை மாற்ற பா.ஜ.க, முயற்சி செய்கிறது.

வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.முக்கிய தொழில்கள் அனைத்தும் உலகின் 3வது கோடீஸ்வரரின் கட்டுப்பாட்டில் உள்ளன. மக்களின் எதிர்பார்ப்புகளை அறியவே யாத்திரை மேற்கொண்டுள்ளேன். காங்கிரஸ் தன்னுடைய பாதையில் சரியாக சென்று கொண்டிருக்கிறது. நான் இந்த யாத்திரைக்கு தலைமையேற்கவில்லை. மற்ற நிர்வாகிகளை போல் நானும் பங்கேற்றுள்ளேன். எனக்கு மட்டுமே நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்.

இந்த யாத்திரையில் காங்கிரசார் மட்டுமல்ல பொது மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.காங்கிரஸ் தலைவர் பதவியை மையப்படுத்தி இந்த யாத்திரையை மேற்கொள்ளவில்லை. கட்சியின் தலைவர் யார் என்பது தேர்தலுக்கு பிறகு தெரியும்’’இவ்வாறு ராகுல் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal