லோன் ஆப் கடன் வாங்கியதால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட தகவல் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆந்திரா மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், லப்பாத்தி பகுதியை சேர்ந்தவர் துர்கா ராவ் (வயது 35).டெய்லராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரம்யா லட்சுமி (30). தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அங்கு போதிய வருமானம் கிடைக்காததால் ராஜ மகேந்திர வரத்திற்கு குடியேறினார்.

துர்கா ராவ் லோன் ஆப் மூலம் ரூ.30,000 கடன் வாங்கினார். வாங்கிய கடனில் பாதியை திருப்பி செலுத்தி உள்ளார். மீதி பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. துர்கா ராவ் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட லோன் ஆப் கும்பல் பணத்தை திருப்பி செலுத்தவில்லை என்றால் உனது மனைவியின் படத்தை நிர்வாணமாக்கி சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் துர்காராவ், ரம்யாலட்சுமி கிழக்கு கோதாவரி மொகல் தூரில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வந்தனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் தங்களது பிள்ளைகளை உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். தனது சகோதரியின் கணவர் ராஜேஷுக்கு போன் செய்த ரம்யா லட்சுமி தங்களுடைய பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறினார்.

இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் தம்பதி தங்கியிருந்த லாட்ஜுக்கு வந்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இருவரையும் மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லோன் ஆப் கடன் வாங்கியதால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட தகவல் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் ஆந்திராவில் இதுபோல் ஏராளமான சம்பவங்கள் நடந்து வருவதால் லோன் ஆப்-களை தடை செய்ய ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal