சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து விபசார விடுதிகளாக மாற்றும் புதிய கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் விபசார தரகர் கணேசனுக்கும், சினிமா தயாரிப்பாளரான பாஸ்கரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பாஸ்கரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்புகளை குறி வைத்து போலீசார் விபசார வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் சென்னை அண்ணா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற பாலியல் வேட்டை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்ணாநகர் 18-வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண்களை வைத்து வாலிபர் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அந்த குடியிருப்பில் புகுந்து குறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 4 பெண்கள் இருந்தனர். அனைவரையும் மீட்ட போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் காயல் பட்டினத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த 4 பெண்களில் ஒருவர் மட்டும் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஆவார். மற்ற 3 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

திருவண்ணாமலை, திருச்சி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்த இவர்கள் 3 பேருமே திருமணமானவர்கள். கணவவரை பிரிந்தோ அல்லது கணவரால் கைவிடப்பட்ட நிலையிலோ இந்த பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

தனியார் நிறுவனங்களில் நல்ல வேலை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி வெளி மாவட்டங்களில் இருந்து பெண்களை சென்னைக்கு அழைத்து வரும் புரோக்கர்கள், பின்னர் பண ஆசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் முகாமிட்டு உள்ள பாலியல் தரகர்களை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

அண்ணா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் தரகர் சையது கைது செய்யப்பட்ட நிலையில் அவரது கூட்டாளிகளான அன்பு, சத்தியமூர்த்தி ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal