கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கல்குவாரியில் தள்ளி மனைவி கொலை செய்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த நகரி ராமாபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 37). இவரது மனைவி வனிதா (30). இவர்கள் இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். விஜயகுமார் நகரியில் செல்போன் கடை நடத்தி வந்தார். அப்போது அவரது கடைக்கு வந்த சி.ஆர்.கண்டிகையை சேர்ந்த தமிழரசு (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். விஜயகுமார் தமிழரசுவை தனது வீட்டிற்கு அடிக்கடி அழைத்துச் செல்வார். அப்போது தமிழரசுவுக்கும், வனிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

விஜயகுமார் கடைக்கு சென்று விட்ட பிறகு தமிழரசு அவரது வீட்டிற்கு சென்று வனிதாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த தகவல் விஜயகுமாருக்கு தெரியவந்ததால் தமிழரசுவை வீட்டிற்கு வரக்கூடாது, வனிதாவுடன் பேசக்கூடாது என கண்டித்தார். இதனால் வனிதாவுக்கும், தமிழரசுவுக்கும் விஜயகுமார் மீது ஆத்திரம் ஏற்பட்டது. கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள விஜயகுமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு ராமாபுரம் அருகே உள்ள கல்குவாரிக்கு விஜயகுமாரை வனிதா அழைத்து சென்றார். அங்கு காத்திருந்த தமிழரசு, நாகராஜ், சந்தோஷ் குமார் ஆகியோர் சேர்ந்து விஜயகுமாரை கல்குவாரி குட்டைக்குள் தள்ளினர். அப்போது விஜயகுமார் கல்குவாரி குட்டையில் இருந்து நீச்சலடித்து கரைக்கு வர முயன்றார். இதனை கண்ட வனிதா அவரது தலையில் கல்லை தூக்கி போட்டார். இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து 4 பேரும் ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்து வீட்டிற்கு வந்து விட்டனர். நேற்று காலை தனது கணவரை காணவில்லை என நகரி போலீசில் வனிதா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை வனிதா ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் வனிதா அவரது கள்ளக்காதலன் தமிழரசு மற்றும் நாகராஜ், சந்தோஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal