‘‘தேர்தல் வாக்குறுதிகள் 70% நிறை வேற்றப்பட்டது. எஞ்சிய 30% வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும்’’ என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
கோவை கொடிசியா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் பெற்று தந்தவர் அண்ணாதுரை. என்னிடம் மக்கள் மகிழ்ச்சியோடு, நம்பிக்கையோடு மனுக்களை கொடுக்கின்றனர். ஆறுமுகசாமி ஆணையம், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகள் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பல பிரச்னைகள் உள்ளன. அதை சட்ட சபையில் தாக்கல் செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் வாக்குறுதிகள் 70% நிறைவேற்றப்பட்டது. எஞ்சிய 30% வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும்.
பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்த ஆறுமுகசாமி ஆணயைத்தை அப்போதைய முதல்வர் பழனிசாமி அமைத்தார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டேன் எனக் கூறியவர் பழனிசாமி. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றிய ஆணைய அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும்.
நிதிப்பிரச்சனையை சீரமைத்த பின் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும். வரும் 5ம் தேதி டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தமிழகம் வருகிறார். மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் துவங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.