தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக செயல்படுத்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் முதல்-அமைச்சர் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் தமிழிலேயே கையொப்பம் இடவும், அதில் முன்னெழுத்தையும் (இனிஷியல்) தமிழிலேயே எழுத வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி மாணவர்களின் தொடக்க கல்வி முதல் கல்லூரி காலம் வரையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு தமிழை முதன் முதலில் மாணவர்களது பெயரில் சேர்ப்பது சிறப்பானதாக அமையும். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பெயர் எழுதும்போது அதன் முன்னெழுத்தையும், தமிழில் எழுதும் நடைமுறையை அன்றாட வாழ்வில் கொண்டு வர மாணவர்கள் பள்ளிக்கு சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லூரி முடித்து பெறும் சான்றிதழ் வரை முன்னெழுத்துடன் வழங்கும் நடைமுறையை கொண்டு வரவேண்டும்.

மேலும் மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட அறிவுறுத்தப்படுகிறது. இந்த அரசாணையை மேற்கோள் காட்டி பள்ளி கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், மாணவ-மாணவிகள் தங்கள் பெயரை எழுதும்போது இனிஷியலையும் தமிழிலில் தான் எழுத வேண்டும். பதிவேடுகளிலும் அதை பின்பற்றவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal