மோசடி பத்திரங்கள் தொடர்பான புகார்கள் உறுதியாகும் நிலையில், அந்த பத்திரங்களை சார்-பதிவாளர், மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்ய அதிகாரம் வழங்கும், தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில், சில ஆண்டுகளில் மோசடி பத்திரப்பதிவுகள் வெகுவாக அதிகரித்துள்ளன. உரிமையாளருக்கு தெரியாமல், வேறு நபர்கள் ஆள்மாறாட்டம், போலி ஆவணங்களை பயன்படுத்தி, மோசடி பத்திரப்பதிவுகளை மேற்கொள்கின்றனர். இதில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தால், அது குற்றவியல் நடவடிக்கைக்கு அனுப்பப்படும். காவல் துறை விசாரணையில் மோசடி உறுதியாகும் நிலையில், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை கிடைக்கும்.

ஆனால், பத்திரம் ரத்தாகாது.’உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி வாருங்கள்’ என, சார்-பதிவாளர்கள், பொது மக்களை அலைக்கழிப்பது வாடிக்கையாக உள்ளது.இதைக் கட்டுப்படுத்த, பதிவுத் துறை பல்வேறு சுற்றறிக்கைகள் பிறப்பித்தாலும், சார்-பதிவாளர்கள் மதிப்பதில்லை.இதை கருத்தில் வைத்து, தமிழக அரசு பதிவு சட்டத்தில் குறிப்பிட்ட சில பிரிவுகளை திருத்த முடிவு செய்தது.

இதற்கான மசோதா, 2021 ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் வாயிலாக, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசுக்கு தகவல் வந்துள்ளது. இதற்கு, தமிழக வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.பயன் என்ன?

இந்த சட்டத் திருத்தத்தின் சிறப்பு அம்சங்கள்:& சட்டத்தால் தடை செய்யப்பட்ட பத்திரங்கள், போலி பத்திரங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டால், சார்-பதிவாளர் அவற்றை மறுக்க வேண்டும்.

சட்ட விதிகளுக்கு எதிராக பதிவு நடந்துள்ளதாக, சார்-பதிவாளர் கருதினால் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கலாம். ஒரு பத்திரப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக தெரியவந்தால், அந்த பத்திரத்தை சார்-பதிவாளர், மாவட்ட பதிவாளர் ரத்து செய்யலாம், பதிவுத் துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு. மோசடி புகார் அடிப்படையில் ரத்து செய்யப்பட்ட பத்திரத்தால் பாதிக்கப்பட்டதாக, யாராவது கருதினால், உரிய காரணங்களுடன், 30 நாட்களுக்குள் அரசிடம் மேல்முறையீடு செய்யலாம். மோசடி பத்திரப்பதிவுக்கு துணை போகும் சார்-பதிவாளருக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் விதிக்க, இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது

மோசடி பத்திரப்பதிவால் பாதிக்கப்பட்டு, சொத்தை இழக்கும் பொது மக்களின் புகார்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க இது வழிவகுக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal