அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்து ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இடையே மோதல் வெடித்திருக்கிறது ஒரு பக்கம்… மறு பக்கம் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை மறுபடியும் மீட்டெடுப்பேன் என்கிறார் சசிகலா… அ.ம.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு வருகிற 15-ந்தேதி நடக்கிறது.

இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வில் நீடித்து வரும் குழப்பம் குறித்து, அக்கட்சியைப் பற்றி நன்கு அறிந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசினோம்.

எடுத்த எடுப்பிலேயே, ‘‘சார், அடுத்த ஆறு மாதத்திற்கு அ.தி.மு.க.வில் குழப்பம் நீடித்துக்கொண்டுதான் இருக்கும். சில தினங்களுக்கு முன்பு வரை எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கியிருந்தது. ஆனால், இன்றைக்கு சேலம் மாவட்டத்தில் இருந்தே சிலர் ஓ.பி.எஸ்.ஸின் பண்ணை வீட்டிற்கு சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்!

அதே போல், எடப்பாடிக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி, காமராஜ் ஆகியோர் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் மௌனமாக இருக்கிறார்கள். காரணம், இவர்களின் தலைக்கு மேல் கத்தியாக வழக்குகள் தொங்கிக்கொண்டிருக்கிறது. எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்பதுதான் இவர்களுடைய நிலைமை! அதே போல்தான எடப்பாடி பழனிசாமிக்கும், கொடநாடு வழக்கு, டெண்டர் வழக்கு, என வழக்குகள் துரத்திக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில்தான், அ.தி.மு.க.வில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய மாவட்டச் செயலாளர்கள் குறுநில மன்னர்களைப் போல் இருந்து வந்தனர். அவர்களுக்கு அடிபணிந்து கிடந்தவர்கள், இன்றைக்கு ஓ.பி.எஸ். அணிக்குச் சென்று முக்கியப் பதவிகளைப் பெற்று, அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்! இதுவே ஒரு மிகப்பெரிய மாற்றம்தான்… முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி கொடுத்ததற்காக ஓ-.பி.எஸ்.ஸை கொஞ்சம் எதிர்த்துப் பேசி வருகிறார். இந்த உதயக்குமரைப் பற்றி ஒரு சிறு குழந்தையக் கூட கேட்டால் சொல்லிவிடும், ‘நடிகர் திலகத்தை’யே மிஞ்சி விடுவார் என்று!

எனவே, எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பவர்கள், தங்களது பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக இருக்கிறார்கள். ஆனால், உண்மையான தொண்டர்கள், ஒரு நல்ல தலைமையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அந்த தலைமைப் பொறுப்பிற்கு, அதாவது பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா விரைவில் வருவார். அவரது தலைமையின் கீழ் விரைவில் ஒன்று பட்ட அ.தி.மு.க. உருவாகும். வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மாபெறும் வெற்றியடையும்.

தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ… அது அடுத்த ஆறு மாதத்திற்குள் நடந்தே தீரும்… அதுவரை பொறுமை காத்திருங்கள்!’’ என்றார்

ஆறு மாதம்தானே பொறுத்திருந்து பார்ப்போம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal