அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும், பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து, அனுமதி கேட்டுள்ளதால், சமரசத்திற்கு இடமில்லை என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி துவக்க விழாவில் பங்கேற்க, இரண்டு நாள் பயணமாக, சென்னைக்கு இன்று பிரதமர் மோடி வருகிறார். இன்று இரவு, கவர்னர் மாளிகையில் தங்குகிறார். இரவு 8:00 மணிக்கு மேல் பிரதமர் மோடியை சந்திக்க, தமிழக பா.ஜ.க, தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனுமதி கேட்டுள்ளனர். அதேபோல், பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தனித்தனியாக சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர்.

அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘ ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதற்காக, பிரதமர் மோடியை சந்தித்து, தம்பிதுரை வாழ்த்து தெரிவித்தார். அப்போது, பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைந்து செயல்பட பழனிசாமி விரும்பவில்லை என்றும், அதில் அவர் உறுதியாக இருப்பதாகவும், பிரதமரிடம் தம்பிதுரை கூறியுள்ளார். தி.மு.க., அரசை கண்டித்து, சென்னையில் நேற்று பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய முன்னாள் அமைச்சர் உதயகுமார், ‘பன்னீர்செல்வம் நேற்று தர்மயுத்தம் நடத்தினார்; இன்று துரோக யுத்தம் நடத்துகிறார்’ என சாடினார்.

தி.மு.க., அரசை எதிர்த்து நடந்த போராட்டத்தில், பழனிசாமி முன்னிலையில், பன்னீர்செல்வத்தை எதிர்த்தே பலரும் பேசினர். இதன் வாயிலாக, பிரதமர் முன்னிலையில் சமரச பேச்சு நடத்த வாய்ப்பு இல்லை என்றும், அப்படியே நடந்தாலும் பழனிசாமி அதற்கு உடன்பட மாட்டார்’’ என்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal