அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு ஓ.பி.எஸ். வருகை புரிந்ததும், அவசரம் அவசரமாக எடப்பாடி ஆதரவு மாஜிக்கள் வெளியேறிய சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுகவில் நடந்து முடிந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவாதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை. அது காலத்தின் கட்டாயம், அது குறித்துதான் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது’ என பொதுவெளியில் சொன்னது அதிமுகவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமையா ஓபிஎஸ் இருக்க வேண்டும், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர் ஓபிஎஸ் என்றெல்லாம் சென்னையின் பிரதான சாலைகளில் பெரிய போஸ்டர்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியிருந்தனர். அதேபோல், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் அவருக்கு ஆதரவாக கட்சியில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடியின் ஆதரவாளராக கருதப்படும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், சி.வி.சண்முகம், வளர்மதி உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஓ.பி.எஸ். கட்சி அலுவலகத்திற்கு வர இருப்பதை அறிந்து, அங்கு நடந்துகொண்டிருந்த பொதுக்குழு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முன் கூட்டியே முடிக்கப்பட்டு அவசர அவசரமாக மூத்த நிர்வாகிகளான சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் புறப்பட்டனர்.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், ‘‘அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி ஜூன் 23-ம் தேதி நடைபெறும். ஒற்றைத் தலைமை விவகாரம் செயல் வடிவம் பெறுமா என்பது குறித்து விரைவில் தெரியவரும்.

கட்சியில் எந்த முடிவாக இருந்தாலும ஒருமித்த கருத்துடன் எடுக்கப்படும். அதேபோல், ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வருகைக்கும், அதிமுக தீர்மான குழு கூட்டம் நிறைவுக்கும் சம்பந்தமில்லை. அதிமுக தீர்மானக் குழு கூட்டம் ஜூன் 18-ம் தேதி மீண்டும் நடைபெறும். பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்’’ என்றார்.

ஜெயக்குமார் வெளியே வந்தபோது, அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளால் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் திட்டித் தீர்த்தனர். அவர் கார்மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இந்த சம்பவம்தான் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal