இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் பாஜக முழு மூச்சாக இறங்கி இருக்கிறது. கூட்டணி கட்சிகள், நட்பு கட்சிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் பாஜக, மத்திய அரசு இனி வரும் காலங்களில் கொண்டு வரும் முக்கிய மசோதாக்களை ஒருமனதாக ஏற்கும் வகையில் தங்களுடன் ஒத்த கொள்கை கொண்டவரை குடியரசுத் தலைவராக நியமிக்க திட்டமிட்டு இருக்கிறது.

இந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளை சேர்ந்த 22 தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். அவரும் தனது கடிதத்தில் ஜூன் 15 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான மம்தா பானர்ஜியின் இந்த முயற்சிக்கு ஒருபக்கம் வரவேற்பு இருந்தாலும், எதிர்க்கட்சிகளிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தி இருந்தது. இடதுசாரிகள், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என அறிவித்தன. அதேநேரம் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்தது.

அதன்படி கடந்த 15&ந்தேதி டெல்லியில் கூடியுள்ள கூட்டத்தில் 13 கட்சிகள் பங்கேற்று உள்ளன. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் தேவகவுடா, குமாரசாமி, சிவசேனா சார்பில் பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்துக்கு முன்பாக பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசினேன். பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக காங்கிரஸின் நிலைபாட்டை அறிய விரும்பியதாக தெரிவித்தார். அவர்களின் வேட்பாளர் யார் என்று நான் கேட்டேன். சர்ச்சையற்ற நபரின் பெயரை முன்வைத்தால் அரசு அதை ஏற்குமா? எனவும் நான் அவரிடம் கேட்டேன்’’என்றார்.

ஆக, மொத்தத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸின் பல்ஸை பா.ஜ.க. பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal