என்னை சந்திக்க வரும் தொண்டர்கள் என் காலில்‌ விழுந்து வணங்குவதை கண்டிப்பாக தவிர்த்‌திடுங்கள் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ நம்‌ புரட்சித்தலைவரால்‌ உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால்‌ வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு பேரியக்கம்‌. ஏழை எளியவர்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு உருவாக்கப்பட்ட இயக்கம்‌. புரட்‌சித்தலைவரையும்‌, புரட்சத்தலைவியையும்‌ இரு கண்களாக பார்க்கும்‌ கழக உடன்பிறப்புகளுக்கும்‌, என்னை நேசிக்கும்‌ அனைவருக்கும்‌ ஓர்‌ அன்பான வேண்டுகோள்‌.

என்னை நேரில்‌ சந்திக்க வருபவர்கள்‌ என்‌ மேல்‌ உள்ள பிரியத்தால்‌ என்னோடு புகைப்படம்‌ எடுத்துக்கொள்வதில்‌ எந்த ஆட்சேபனையும்‌ இல்லை. ஆனால்‌, என்னிடம்‌ மலர்க்கொத்து, பொன்னாடை மற்றும்‌ நினைவு பரிசுகள்‌ வழங்குவதை தயவு செய்து தவிர்க்குமாறு அன்புடன்‌ கேட்டுக் கொள்கிறேன்‌. அவ்வாறு, ஏதேனும்‌ எனக்கு செய்ய விரும்பினால்‌, நீங்கள்‌ வசிக்கும்‌ இடங்களில்‌ உள்ள ஏழை எளியவர்கள்‌, ஆதரவற்றோர்‌ மற்றும்‌ வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள்‌, பள்ளிகளில்‌, கல்லூரிகளில்‌ கல்வி கற்க கட்டணம்‌ செலுத்த முடியாத ஏழை எளிய மாணவச்‌செல்வங்களுக்கு உதவி செய்யுங்கள்‌, பசியால்‌ வாடுகின்ற ஏழை எளிய மக்களுக்கு உணவு அளியுங்கள்‌.

கழக உடன்பிறப்புகள்‌, இது போன்று தங்களால்‌ இயன்ற உதவிகளை செய்தாலே, அதுவே தாங்கள்‌ எனக்கு அளிக்கும்‌ ஒரு சிறந்த பரிசாக மனதார நான்‌ ஏற்றுக்கொள்ஒறேன்‌. அதேபோன்று, என்னை சந்திக்கும்‌ பொழுது காலில்‌ விழுந்து வணங்குவதை கண்டிப்பாக தவிர்த்‌திடுங்கள்‌, என்‌ மீது நீங்கள்‌ காட்டுகின்ற மரியாதையை மனதில்‌ வைத்து கொண்டாலே போதும்‌. எனவே, உங்கள்‌ அனைவரது ஒற்றுமையும்‌, ஒப்பற்ற அன்பு மட்டுமே எனக்கு வேண்டும்‌ என்பதை தெரிவித்துக்‌ கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சசிகலாவின் இந்த ‘மனமாற்ற’ அறிக்கைதான் ரத்தத்தின் ரத்தங்களை வியப்படைய வைத்திருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal