அ.தி.மு.க.வில் ராஜ்ய சபா வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பும் சர்ச்சை களைகட்டியது. அறிவித்த பிறகு அதற்கு மேல் சர்ச்சை வெடித்துக் கிளம்பியிருக்கிறது.

அ.தி.மு.க.வில் ஏற்கனவே இரட்டைத் தலைமையால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாமல் திணறிவரும் நிலையில், ராஜ்யசபா வேட்பாளராக சி.வி.சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது புதிய சர்ச்சை ஒன்று வெடித்துக் கிளம்பியிருக்கிறது.

ராஜ்யசபா வேட்பாளர் தேர்வுதான் முடிந்துவிட்டதே அதன் பிறகு என்ன சர்ச்சை என்ற விசாரணை இறங்கியபோது நமக்கு கிடைத்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்.

அதிமுகவில் ராஜ்ய சபா தேர்தலுக்கு பலரின் பெயர்கள் ஆலோசனை செய்யப்பட்டது. ராஜ் சத்யன் தொடங்கி கோகுல இந்திரா வரை பலரின் பெயர்கள் இந்த லிஸ்டில் இருந்தது. இதற்காக பலகட்ட ஆலோசனைகள் நடந்தன. அதன்பின்பே சி.வி.சண்முகம், தருமர் ஆகியோரின் பெயர்களை அதிமுக ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்தது. வன்னியர் &- முக்குலத்தோர், வடக்கு& – தெற்கு, இபிஎஸ் டீம் – ஓபிஎஸ் டீம் என பங்கு பிரித்துக்கொண்டனர்.

இந்த எம்பி தேர்தல் ரேஸில் முன்னிலையில் இருந்தது என்னவோ ஜெயக்குமார்தான். கடைசிவரை ஜெயக்குமார் எம்பி ஆக வாய்ப்பு இருப்பதாகவே கூறப்பட்டது. ஆனால் கடைசியில் இவருக்கு பதவி கொடுக்கப்படவில்லை. இதற்கு ஜெயக்குமார் தரப்பிடம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சொன்ன விளக்கம்தான் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியதாம்.
‘‘உங்க மகன் ஜெயவர்த்தன எப்படியும் எம்பி தேர்தலில் 2024ல் நிற்பாரே! அவருக்கு சீட் வேண்டாம் என்றால் நீங்கள் இப்போது நிற்கலாம்’’ என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் கொந்தளித்துப் போன ஜெயக்குமார் தரப்பு, அதிமுக இரட்டை தலைமையிடம் ஜெயக்குமார் முக்கியமான பதில் ஒன்றை அளித்ததாம். ‘‘சரி எனக்கு எம்பி பதவி வேண்டாம். ஆனால் நீங்கள் வேட்பாளராக தேர்வு செய்த ஒருவர் மீண்டும் வந்து எம்எல்ஏ தேர்தலின் போது சீட் கேட்டால் நிச்சயம் கேட்பார்… அ.தி.மு.க. வெற்றி பெற்றால் மந்திரி சபையிலும் இடம் பெறுவார்… அவருக்கு சீட் தரமாட்டேன் என்று உங்களால் சொல்ல முடியுமா..? அவருக்கு ஒரு நியதி… எனக்கு ஒரு நியதியா–? என்று எடப்பாடி தரப்பில் கேள்வி கேட்டிருக்கிறார்.

இது பற்றி அ.தி.மு.க. தரப்பில் விசாரித்தபோது, ‘‘வன்னியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சி.வி.சண்முகத்திற்கு எம்.பி. பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் சி.வி.சண்முகம் போட்டியிடுவார். இது எல்லாம் தெரிந்தே எடப்பாடியார் அவருக்கு சீட் கொடுத்திருக்கிறார். அப்போது எம்.பி.பதவியை ராஜினாமா செய்யவேண்டுமே. இது நிச்சயம் நடக்கும் நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள்’’ என்றனர்.

இதையெல்லாம் மனதில் வைத்துதான், சென்னையில் கட்சியை வளர்ப்பது கடினம். இதே நிலை நீடித்தால் சென்னை முழுவதும் தி.மு.க.வின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் பேசியது, தலைமைக்குச் சென்று ஜெயக்குமாருக்கு முக்கிய பதவி ஒன்றை தருவதற்கான ஆலோசனையில் இறங்கியிருக்கிறதாம் எடப்பாடி டீம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal