18 வயதுக்கு மேற்பட்ட சுய ஒப்புதலோடு பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் விஷயத்தில் போலீஸ் தலையிடவோ, குற்ற நடவடிக்கை எடுக்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

கொரோனா காலத்தில் பாலியல் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக, ‘‘பாலியல் தொழில் செய்வதால் ஒருவரை துன்புறுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. பாலியல் தொழிலும் ஒரு தொழில்முறைதான்(Profession).எனவே, வயது வந்தவர்கள் விருப்பத்தின் பேரில் அந்த தொழிலில் ஈடுபடும் போது அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது.

பாலியல் தொழிலாளர்களை காவல்துறையினர் ரெய்டு செய்யும் போது அவர்களைக் கைது செய்வது, அபராதம் விதிப்பது போன்ற துன்புறுத்தல்களில் ஈடுபடக்கூடாது. அவர்களுக்கும் அனைத்து குடிமக்கள் போல உரிய மரியாதை, மாண்பு வழங்கப்பட வேண்டும். பொதுவாக பாலியல் தொழிலாளர்கள் மீது காவல்துறை கடுமையான, வன்முறையான போக்கை கடைப்பிடிப்பது காணப்படுகிறது. எனவே, காவல்துறையினர் பாலியல் தொழிலாளர்களை பேச்சின் மூலமாகவோ, உடல் ரீதியான தாக்குதலிலோ உட்படுத்தக்கூடாது.

பாலியல் தொழிலாளர்களின் கைது, ரெய்டு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் என, ஊடகங்கள் அவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் எந்த புகைப்படத்தையும் வெளியிடவோ அல்லது ஒளிபரப்பவோ கூடாது” என உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஆணுறைகளைப் பயன்படுத்துவதை, பாலியல் தொழிலாளிகளின் குற்றச் சான்றாக காவல்துறை கருதக் கூடாது. மீட்கப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படும் பாலியல் தொழிலாளர்களை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் சீர்திருத்த இல்லங்களுக்கு அனுப்பவும் பரிந்துரைத்துள்ளது.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஜூலை 27ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal