காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ள கபில் சிபல், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சமாஜ்வாதி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பின்னர் அவர் கூறுகையில், காங்கிரசில் இருந்து விலகுவதாக கடந்த 16ம் தேதி கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.

லோக்சபா தேர்தல் தோல்வி காரணமாக ராகுல், பதவி விலகியதை தொடர்ந்து இடைக்கால தலைவராக சோனியா செயல்பட்டு வருகிறார். இதனை தொடர்ந்து,’கட்சிக்கு நிரந்தர தலைமை தேவை. கட்சி நிர்வாகத்தில் சீர்திருத்தம் தேவை’ என, சோனியாவுக்கு, 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியிருந்தனர். அதில், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தலைவருமான கபில் சிபலும் ஒருவர். அதிருப்தியில் இருந்த அவரை, கட்சி மேலிடம் ஒதுக்கி வைத்திருந்தது. அவ்வபோது, கட்சியின் நடவடிக்கைகளை கபில் சிபல் விமர்சித்து வந்தார்.

இந்நிலையில், உ.பி.,யில் இருந்து ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு நடக்கும் தேர்தலில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட கபில் சிபல் இன்று( மே 25) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் இருந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 16ம் தேதியே காங்கிரசில் இருந்து விலகுவதாக கட்சியின் தலைமைக்கு கடிதம் அனுப்பி வைத்து விட்டதாக கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal