சமீபத்தில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்து தடம் மாறிச் சென்ற சம்பவம்தான் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இது பற்றி அந்த சொகுசு பேருந்தில் பயணித்த பயணிகளிடம் பேசினோம்.

‘‘சார், கடந்த வாரம்தான் ஹை டெக் படுக்கை வசதிகளுடன் கொண்ட இந்த புதிய பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. திருவணந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம் புறப்பட்ட பேருந்து, மாலை முகாம்பிக்கைக்கு சென்றது. எர்ணாகுளத்தில் மாற்று டிரைவர் பேருந்தை இயக்கினார். நள்ளிரவு கூண்டப்பூர் சென்றுகொண்டிருந்தபோது, எல்லா பயணிகளும் அசந்து தூங்கிவிட்டனர்.

விடியற்காலையில் விழித்துப் பார்த்ததும், வெளிநாட்டு பெண்கள் கடற்கரையில் கைப்பந்து விளையாடியதை பார்த்ததும், அதிர்ச்சியடைந்தோம். விசாரித்தபோதுதான் கோவா கடற்கரை என்பது தெரியவந்தது. இது பற்றி பேருந்து ஓட்டுநரிடம் கேட்டதற்கு, ‘கூகுள் மேப் தவறான வழிப்பாதையை காட்டிவிட்டது’ என்று, வலைதளத்தின் மீது பழியைப் போடுகிறார். எல்லாம் எங்கள் தலையெழுத்து’’ என்று அடித்துக்கொண்டனர்.

திசை மாறிய சொகுசுப் பேருந்தால், பயணிகள் திகைத்துப் போய் நின்றதுதான் மிச்சம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal