வங்கக்கடலில் உருவாகியுள்ள, ‘அசானி’ புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில், 14 மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
‘‘தென்கிழக்கு வங்கக்கடலில், அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை நிலவரப்படி, ‘அசானி’ புயலாக வலுவடைந்துள்ளது. இது,படிப்படியாக தீவிரமடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரா, ஒடிசா கடற்கரையை நாளை மாலை நெருங்கலாம்.

அசானி புயல், ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டி கடலிலேயே பயணிக்கும்; கரையை கடக்காது. அதே நேரத்தில், கடலில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.’அசானி’ புயல் காரணமாக, தமிழகத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை ஆகிய 14 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யலாம். அத்துடன், 12ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு.வங்கக்கடலில் உருவான அசானி புயல் வடமேற்கு, வடகிழக்கு நோக்கி நகரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு, வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை, 37 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகலாம்’’இவ்வாறு வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக, மதுரையில் 40.5 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வேலூர், 39.9; சென்னை விமான நிலையம், 38.8; கரூர் பரமத்தி, 38; ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, 37.9 டிகிரி செல்ஷியஸ் ஆக வெப்பநிலை இருந்தது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal