‘பேரறிவாளனை விடுதலை செய்வதில் கவர்னர் மற்றும் ஜனாதிபதி அதிகாரம் குறித்து விஷயங்களுக்குள் போகாமல் நாங்கள் ஏன் விடுவிக்க கூடாது’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், ‘விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தும் கவர்னர் எந்தவிதமான முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்’ என பேரறிவாளன் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு பதில் வாதத்தை முன்வைத்த மத்திய அரசு, ‘பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதிக்கு தான் அதிகாரம் இருக்கிறது. அரசியல் சாசன பிரிவு 72ன்படி, கவர்னர் செயல்படும் விதம் குறித்து கூட ஜனாதிபதியே முடிவெடுக்க முடியும்’ என்றது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘மாநில அரசு ஒரு பரிந்துரையையோ, முடிவையோ ஒப்புதலுக்கு அனுப்புகிறது. அது பிடித்தால் கவர்னரே ஒப்புதல் தருவார், பிடிக்கவில்லை என்றால் ஜனாதிபதிக்கு அனுப்பிவிடுவாரா? பேரறிவாளன் விவகாரத்தில் கவர்னரின் முடிவு ஒவ்வொரு முறையும் முரண்பட்டதாக இருக்கிறது. அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவிற்கு எதிராகவும் ஒரு மாநில கவர்னர் செல்வார் என்றால் அது கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது. அமைச்சரவைக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செல்ல கவர்னருக்கு அதிகாரமில்லை.

விடுதலை செய்வதில் யாருக்கு அதிகாரம் என்ற குழப்பத்தில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும்? கவர்னர் மற்றும் ஜனாதிபதி அதிகாரம் குறித்து விஷயங்களுக்குள் போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது? பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கை முடித்து வைக்கும் ஒரே தீர்வு என கருதுகிறோம்’’எனக் கூறியதுடன் அடுத்த ஒரு வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal