டெல்லி பாராளுமன்றத்திலும் சரி, தமிழகத்திலும் சரி என்ன விஷயங்களை பேசி, செயல்படுத்தி அனைவரது கவனத்தையும் கனிமொழி ஈர்ப்பாரோ… அதே விஷயத்தை கையிலெடுத்து, தமிழக சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத்தில் அப்படி என்ன பேசினார் உதயநிதி… அதுவும் கனிமொழி பேசும் கான்சப்ட் என்று மூத்த உ.பி.க்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘கலைஞர் இருக்கும்போது கனிமொழிக்கு தி.மு.க.வில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. கலைஞரின் மறைவிற்குப் பிறகு கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இந்த விவகாரம்தான் அவரது ஆதாரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. சமீபத்தில் கூட கோவையில் இளம்பெண்களை மகளிர் அணியில் இணைக்கும் நிகழ்ச்சி ஒன்றை உதயநிதி தலைமையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்தினார். இந்த விவகாரம் மகளிர் அணியினர் மூலமாக கனிமொழியின் காதுக்கு எட்ட, திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில்தான், தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. பல்வேறு துறை மீதான மானிய கோரிக்கைகள் விவாதங்கள் இதில் நடைபெற்று வருகிரியாது. இந்த அமர்வு மே 10ஆம் தேதி வரை நடைபெறும்.

நேற்று சமூக நலத்துறை மானியக்கோரிக்கையில் விவாதம் நடைபெற்றது. இதில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையர்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதை எல்லா வயது திருநங்கையர்களுக்கும் வழங்க வேண்டும். திருநங்கையர் அனைவரையும் ஆதரவற்றவர்கள் என கருதி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் பேசினார்.

பொதுவாக திமுக எம்பி கனிமொழி தொடர்ந்து இது போன்ற விஷயங்களில் ஆர்வமாக கருத்து தெரிவிப்பார். பெண்கள், திருநங்கைகள் தொடர்பான கருத்துக்களை, கோரிக்கைகளை நாடாளுமன்றத்திலும், பொது இடங்களிலும் கனிமொழிதான் வைப்பது வழக்கம். நேற்று கனிமொழியின் இந்த கான்சப்ட்டை உதயநிதி கையில் எடுத்து, சட்டசபையில் பேசியிருக்கிறார்.

திருநங்கைகள் மற்றும் மகளிர், இளைஞர்கள் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் முதல் குரல் கொடுப்பவர் கனிமொழிதான். இதனால், அவர்கள் மத்தியில் கனிமொழிக்கென்று தனி மரியாதை இருந்து வந்தது. சமீபத்தில் கூட தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் ஜூனியர் ஹாக்கி விளையாட்டுப் போட்டியை நடத்தி முடித்தார். இந்த விளையாட்டுப் போட்டியை நடத்த முடியுமா என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் சிறப்பாக நடத்திக் காட்டினார் கனிமொழி. சமீபத்தில் 12வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஆடவர் சாம்பியன்ஷிப் போட்டிகள் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஏப்ரல் 6 முதல் 17 வரை நடைபெற்றது. 22 வருடங்களுக்கு வெள்ளி பதக்கம் வென்றனர் தமிழக அணி வீரர்கள்.

சிறப்பாக விளையாடி பதக்கம் வென்றால், உங்களுடன் மதிய உணவு சாப்பிடுகிறேன் என்று உறுதி கொடுத்தார் கனிமொழி. அதே போல், வெற்றி பெற்ற வீரர்களுக்கு நினைவு பரிசு வழங்கி அவர்களுடன் உணவு அருந்தி மகிழ்ந்தார் கனிமொழி! சமீபத்தில்தான், திருநங்கைகளை தனது வீட்டிற்கு அழைத்து, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார் கனிமொழி எம்.பி.!

கனிமொழி எந்த பானியை கையில் எடுத்திருக்கிறாரோ, அதே வகையில் திருநங்கைகள் மற்று விளையாட்டு வீரர்கள் மீதும் தற்போது அதிக கவனம் செலுத்தி, சட்டசபையில் பேசியிருக்கிறார் உதயநிதி. ஆக, மொத்தத்தில் கனிமொழியின் கான்சப்ட்டை கையிலெடுத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளாட்சித் துறை வழங்கப்படும் என்று தி.மு.க.வினர் எதிர்பார்த்த நிலையில், சட்டசபையில் அவருக்கு சமூக நலத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை சம்பந்தமாக பேச வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சமூக நலத்துறை அல்லது இளைஞர் நலன் விளையாட்டுத்துறைக்கு உதயநிதி அமைச்சரானாலும் ஆச்சர்யப்படுவற்கில்லை. அதற்கு முன்னோட்டமாகத்தான் சட்டசபையில் பேச வாய்ப்பளித்திருக்கிறார்கள் ’’ என்றார்கள்.

ஆக, மொத்தத்தில் உதயநிதிக்கு சமூக நலத்துறையா அல்லது இளைஞர் நலன் விளையாட்டுத்துறையா அல்லது வேறு துறையா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal