நடுத்தர மக்களுக்கும் விமானத்தில் என்றாவது ஒருநாள் பயணித்தாக வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால், விமானநிலையத்தில் இரண்டு இட்லியின் விலை 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அபரிமிதமான இந்த விலை, பயணிகளை தலை சுற்ற வைத்துள்ளது.

கோவை சர்வதேச விமானநிலையத்தை, ஆண்டுதோறும் சுமார், 30 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. பயணிகள் வசதிக்காக விமானநிலையத்தில், பல்வேறு வகையான உணவு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் டெண்டர் முறையில், தொகை செலுத்தி செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு செயல்படும் உணவகங்களில், விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் விலை தாறுமாறாக இருப்பதாக, பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, விமான பயணிகள் தரப்பில், ‘‘ கோவை விமானநிலையத்தில் உள்ள உணவகங்களில், விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் விலை, மிகவும் அதிகமாக காணப்படுகிறது. ஒரு ‘செட்’ இட்லி, 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோவையில் செயல்படும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும், இரண்டு இட்லி விலையுடன் ஒப்பிடுகையில் இது, 60 சதவீதம் அதிகமாகும்.

இப்போதுள்ள காலக்கட்டத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதிக விமான பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால், இந்தளவு விலைக்கு விற்பனை செய்தால் எவ்வாறு வாங்கி சாப்பிட முடியும். அனைவருக்கும் ஏற்ப நியாயமான விலையில், விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

விலை உயர்வு குறித்து, உணவக உரிமையாளர்களோ, ‘‘ மிக அதிக வாடகை கொடுக்க வேண்டிய நிலை உள்ளதால், இந்தளவு கட்டணம் நிர்ணயிக்கப்படவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்’’ என்றனர்.

எல்லாவற்றிற்கும் பொதுமக்கள் தலையில்தான் கை வைக்க வேண்டுமா என்ற கேள்வியும் தற்போது எழ ஆரம்பித்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal