தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தனது தம்பி கே.என்.ராமஜெயத்தின் 10-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருச்சி கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அமைச்சர் நேருவின் கடைசி தம்பியான கே.என்.ராமஜெயத்தை திருச்சி மாவட்ட திமுகவினர் எம்.டி. என்று தான் அழைப்பார்கள். அமைச்சர் நேருவிடம் காரியம் சாதிக்க வேண்டும் என விரும்புபவர்கள் முதலில் கே.என்.ராமஜெயத்தை தான் பார்ப்பார்கள். காலை நேரத்தில் அவர் இறகுப் பந்து விளையாடும் இடத்திற்கே கட்சியினர் சென்று மனதில் இருக்கும் கோரிக்கைகளை கொட்டுவார்கள். அதை விளையாடியவாறே செவிமடுத்து தனது அண்ணன் நேருவிடம் எடுத்துச்சொல்லி தன்னை நாடி வந்தவர்களின் மனதை குளிர்விப்பார் ராமஜெயம்.

இதன் காரணமாக நேருவுக்கு சரிசமமாக திருச்சி திமுகவினர் ராமஜெயத்துக்கும் மரியாதை கொடுக்கத் தொடங்கினர். இதுமட்டுமல்லாமல் நேருவின் நிழாலாக செயல்பட்டவரும் ராமஜெயம் தான். நிர்வாகவியல் படித்தவர் என்பதால் யாரிடம் என்ன வேலையை கொடுக்கலாம் என்பது முதல் அதனை செய்து முடிப்பது வரை அண்ணன் நேருவுக்காக சிரமேற்கொண்டு பல்வேறு காரியங்களை செய்து கொடுத்தவர் ராமஜெயம். இப்படி நேருவின் அரசியல் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழ்ந்த ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி கொடூர முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வை இன்றுவரையுமே அமைச்சர் நேருவால் சிறிதும் ஜீரணிக்கமுடியவில்லை. இந்தச் சூழலில் ராமஜெயத்தின் 10-ம் ஆண்டு நினைவு தினமான இன்று, அவர் உயிருடன் இருந்தபோது பார்த்து பார்த்து ஆசை ஆசையாய் கட்டிய கேர் பொறியியல் கல்லூரியில் ராமஜெயம் சிலைக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுகவினர் பெருமளவில் திரண்டு ராமஜெயம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அந்த நிகழ்ச்சிக்கு தாங்கள் வந்திருக்கிறோம் என்பதை அமைச்சர் நேருவிற்கு தெரியப்படுத்தும் வகையில் அவருக்கும் வணக்கம் போட்டுச் சென்றனர்.

முன்னதாக வீட்டில் குடும்ப உறவுகளுடன் ராமஜெயத்துக்கு திதி கொடுக்கும் நிகழ்வும் நடந்தது, அதில் தம்பியை நினைத்து அமைச்சர் நேரு சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண் கலங்கியதாக கூறப்படுகிறது. சமீபத்தில்தான் ராமஜெயத்தின் மகன் திருமணத்தை சீறும் சிறப்புமாக கே.என்.நேரு நடத்தி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சூழலில், இப்போது வேகமெடுத்துள்ளது. இதனால் விரைவில் இந்த வழக்கில் முக்கியத் திருப்பங்கள் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal