தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று 60 சதவீதத்திற்கு மேல் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்றார். ஆனால், தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தினால், பேருந்துகள் அவ்வளவாக இயங்கவில்லை. இதனால்,பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் கரணமாக தமிழகம் முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரை, விழுப்புரம், விருதுநகர், திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களில் பெருமளவில் பயணிகள் காத்து கிடக்கும் நிலை காணப்பட்டது.

சென்னையில் பேருந்துகள் சரிவர இயங்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். கோயம்பேடு பேருந்து நிலையம், பாரிமுனை, அண்ணாநகர், வடபழனி, தியாகராய நகர், பெரம்பூரில் 90 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள் முன் வராததால், பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதால் அதில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் குறைந்த அளவில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. மதுரையில் தினமும் 900 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், தொழிற்சங்கங்களின் போராட்டத்தையொட்டி இன்று 400 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்து சேவை பாதிப்பால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் ஆளுட் கட்சியான தி.மு.க. தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால்தான் அதிகளவில் பாதிப்பு என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal