தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தாலும், தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில்தான் அவரது அடுத்த டெல்லி பயணம் அனைத்து அரசியல் தரப்பினரையும் கவனிக்க வைக்கிறது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக, 5 நாள் வெளிநாட்டு பயணமாக கடந்த வியாழக்கிழமை துபாய் சென்றார்.அப்போது அவர் தமிழகத்தில் தொழில் துவங்க சாதகமான சூழ்நிலை இருப்பதால் தொழில் துவங்க தமிழ்நாட்டிற்கு வருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்ததுடன், அங்குள்ள தொழிலதிபர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். இதனிடையே, அங்கிருக்கும் தமிழர்களிடமும் கலந்துரையாடினார். இந்த பயணங்களை முடித்து கொண்டு, நாளை 29ம் தேதி சென்னை திரும்புகிறார்.

அதன் பிறகு, 31ம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார்..அன்றைய தினம் பிரதமர் மோடியை சந்தித்தும் பேச உள்ளார். அப்போது, அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

இதைதவிர, வடகிழக்கு பருவமழையின்போது ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அளிக்க வேண்டிய நிவாரண தொகையை வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது குறித்தும் பிரதமரிடம் நம் முதல்வர் வலியுறுத்துவார் என்று தெரிகிறது. அதேபோல, நடந்து முடிந்த தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து வலியுறுத்த உள்ளதாக நம்பப்படுகிறது.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஸ்டாலின் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது திமுக அலுவலக திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கக்கூடும் என நம்பப்படுகிறது.. அன்றைய தினம் இரவு டெல்லியில் தங்கும் முதல்வர், 1-ம் தேதி டெல்லியில் சோனியா காந்தி உட்பட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து முதல்வர் பேசுகிறார். அப்போது பாஜகவுக்கு எதிராக வலுவான அணியை அமைப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

மறுநாள் 2-ம்தேதி, டெல்லியில் உள்ள தீனதயாள் உபாத்யா மார்க் பகுதியில் திமுகவின் புதிய கட்சி அலுவலகமான அண்ணா – கலைஞர் மாளிகையை திறந்து வைக்கிறார். டெல்லியில் உள்ள இந்த அண்ணா- கலைஞர் மாளிகையின் முதல் தளத்தில் முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து பேசுவதற்கான இடமும், தலைவருக்கான பிரத்யேக ரூம்களும் அமைக்கப்பட்டுள்ளது.

சொந்த மாநிலத்தில் காட்டிவரும் அக்கறை ஒருபக்கமும், மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற முயற்சி மறுபக்கமும் என இரண்டு வழிகளில் முதல்வர் தன் கவனத்தை செலுத்தி வருவதற்கு, தேசிய தலைவர்களும் ஆதரவு தந்து வருகிறார்கள்.. திமுகவை பொறுத்தவரை தன்னுடைய கருத்தியலில் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் பயணித்தாலும், தன்னுடைய சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் யாருக்காக விட்டுக் கொடுத்ததில்லை.

மக்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஸ்டாலினின் இந்த டெல்லி விசிட் அரசியல் களத்தில் மிகுந்த கவனத்தை பெறும் என்பதுடன், தேசிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது -பார்ப்போம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal