தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து ஒன்பது மாதங்கள் ஆகின்றன. பெரியளவில் எந்தவொறு தவறும் நடந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதே போல் அமைச்சர்களையும் ‘கை நீட்ட’ விடாமல், ‘கைகட்டி’யே போட்டிருக்கிறார். முதல்வர் ஸ்டாலினின் ஆட்சிக்கு, நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் அமோக மதிப்பெண்கள் போட்டு, வெற்றி பெற வைத்திருக்கின்றனர் தமிழக மக்கள்.

இந்த நிலையில்தான் திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் போக்குவரத்து பணிமனையில் தொழிற்சங்க நிர்வாகி ஒருவரிடம் ஆட்டம் அதிகரித்திருப்பதால், வாங்கும் சம்பளத்தை அந்த நிர்வாகிக்கு ‘பார்ட்டி’ கொடுத்தே பாதி பணம் செலவாகி விடுகிறது என்ற புலம்பல் சத்தம், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

அப்படி என்னதான் பார்ட்டி கொடுக்கிறார்கள் என்று புலம்பும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் பேசினோம்.

தயவு செய்து எங்களது பெயரைப் போட்டுவிடாதீர்கள் என்று சொல்லிக்கொண்டே பேசியவர்கள், ‘‘சார்… ஆட்சி மாறினால் காட்சிகள் மாறுவது எல்லாப் பணிமனைகளிலும் நடப்பதுதான். ஆனால், உப்பிலியபுரம் போக்குவரத்துப் பணிமனையைப் பொறுத்த அளவில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது, அனைத்து தரப்பு நிர்வாகிகளையும் அரவனைத்துச் சென்றார் அப்போது ‘டிராஃபிக்’காக இருந்தவர். அதனால் எந்தவொரு சச்சரவும் இல்லாமல், அனைத்துப் பணியாளர்களும் நிம்மதியாக வேலை பார்த்தனர்.

ஆனால், தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, இலகுரக வாகனங்களில் பணிபுரிவதற்கு (லைட் டூட்டி) ஒருவர் ரூ.25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை கொடுக்க வேண்டி இருக்கிறது. தி.மு.க. நிர்வாகிகளிடம் பணம் வாங்க முடியாது என்பதால், அ.தி.மு.க.வில் இருந்தவர்களை தி.மு.க.வில் இணைந்து கையெழுத்துப் போடச் சொல்லி பணத்தை வாங்கிவிடுகிறார்கள். அப்படி பணம் கொடுப்பவர்களுக்கு ‘சொகுசு’ வண்டியை கொடுத்துவிடுகிறார்கள்.

இப்படி பணம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், டூட்டி முடிந்து இரவில் தினந்தோறும் ஒருவர் பார்ட்டி வைத்தாக வேண்டும் என்கிறார்கள். ஒரு நாள் இரவில் சரக்கு பார்ட்டி வைக்காமல் இருந்தால், மறுநாள் மாற்று பேருந்துக்கு அனுப்பிவிடுகிறார்கள். தற்போது புதிதாக வந்திருக்கும் அதிகாரி ஒருவரும் தினந்தோறும் ‘மிதக்க’ ஆரம்பித்துவிட்டார்! இரவு & பகல் பாராமல் கண்விழித்து பயணிகளை பத்திரமாக கொண்டுவந்தும், இவர்களுக்கு செலவு செய்வதுதான் எங்களுக்கு பெரிய மன உளைச்சலாக இருக்கிறது. இதையெல்லாம் மாவட்ட அமைச்சரான நேருவிடம் சொல்ல முயன்றால், லோக்கல் கட்சியினர் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ‘அனுசரித்துப் போங்கல்’ என்கின்றனர். அதையும் மீறி உண்மைத் தகவலை அமைச்சருக்கு கொண்டு செல்ல முயற்சித்தாலும், மாவட்ட அமைச்சர் நேருவிடம் தவறான தகவலை கொடுத்துவிடுகின்றனர்!

போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இது தொடர்பாக புகார் கொடுக்க இருக்கிறோம். அதே போல் முதல்வர் ஸ்டாலிடமும் புகார் மனு அளிக்க இருக்கிறோம். அதன் பிறகாவது எங்களுக்கு ‘விடியல்’ பிறக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்’’ என்றனர்.

உப்பிலியபுரம் போக்குவரத்து பனிமணையில் நடப்பது, எல்லாம் அந்த ‘பழனி’ அப்பனுக்கே வெளிச்சம் என்கிறார்கள்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal