நகர்ப்புற தேர்தலில் கவுன்சிலர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் மனமுடைந்த திருப்பூர், ம.நீ.ம., வேட்பாளர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் காலேஜ் ரோட்டைச் சேர்ந்தவர் மணி, 55. மாட்டு வண்டி வைத்து லோடு கொண்டு செல்லும் தொழில் செய்து வந்தார். இவர் நடந்து முடிந்த மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் 36 வது வார்டில், ம.நீ.ம., சார்பில் போட்டியிட்டார். தேர்தல் செலவுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி செலவிட்டுள்ளார்.

இந்நிலையில் இத்தேர்தலில் அவர் 44 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியுற்றார். ஓட்டு எண்ணிக்கை வெளியானது முதல் மணி மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். கடந்த இரு நாட்களாக வேலைக்கும் செல்லவில்லை. அதிகாலை அவர் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனர். இரு மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. தற்கொலை குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். மக்கள் நீதி மய்ய திருப்பூர் நிர்வாகிகள் மணியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal