நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முதலிடத்தில் தி.மு.க.வும், இரண்டாம் இடத்தில் அ.தி.மு.க.வும், யாரும் எதிர்பார்க்காத வகையில் 3&ம் இடத்தை பா.ஜ.க.வும் பிடித்திருக்கிறது. இலை இல்லாமல் தாமரை மலர்வதாக அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் போதெல்லாம், ‘தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது’ என்றுதான் அனைத்து கட்சிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் மூக்கின் மேல் விரல் வைத்து யோசித்துக்கொண்டிருப்பார்கள். தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது தே.மு.தி.க. ஆனால், இன்றைக்கு அண்ணாமலையின் அயராத உழைப்பால், பா.ஜ.க. மூன்றாம் இடத்திற்கு வந்திருக்கிறது.

இனியும் இரட்டையர்களை நம்பி பிரையோஜனம் இல்லை… அ.தி.மு.க.வில் இருந்தால் எதிர்காலம் இருக்குமா..? என்று நினைக்கத் தொடங்கி விட்டனர். ரத்தத்தின் ரத்தங்கள், அதாவது மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களைத் தவிர மற்ற நிர்வாகிகள் சசிகலாவை சந்திக்கத் தயாராகி வருகிறார்கள்.

ரத்தத்தின் ரத்தங்களின் இந்த மனமாற்றத்திற்கு காரணம் என்ன என்று தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்று (24.02.2022) சசிகலாவை அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்திக்க முயற்சித்தனர். அந்த சந்திப்பு முயற்சியும் வெற்றியடைந்தது. அதாவது, பிப்ரவரி 24 ஆம் தேதி தி. நகர் வீட்டில் காலை 10.30 மணிக்கு சசிகலாவை சந்திக்க நேரம் கொடுத்திருந்தார். அதன்படி திண்டிவனம் முன்னாள் நகர செயலாளர் சேகர், அர்பன் வங்கி சேர்மேன் தம்பி ஏழுமலை உட்பட சிலர் ஷெரீப் தலைமையில் சென்றனர்.இவர்களைத் தொடர்ந்து கடலூர் முன்னாள் நகர செயலாளரும் முன்னாள் நகரமன்ற தலைவருமான குமரன் தலைமையில் பல நிர்வாகிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் உட்பட எட்டு மாவட்ட நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்துள்ளனர்.

அ.தி.மு.க. நிர்வாகிகளை வரவேற்று பேசிய சசிகலா, ‘‘சில நிர்வாகிகள் சுய லாபத்திற்காக, ஒட்டு மொத்த அ.தி.மு.க. இருக்கும் இடம் தெரியாமல் போகும் நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். ‘மீண்டும் சசிகலா கையில் அ.தி.மு.க. போனால், நாம் அடிமையாகிவிடுவோம்’ என்று ஒரு சப்பைக்கட்டு காரணத்தை சொல்லி வருகிறார்கள். அது யார் என்றும் எனக்குத் தெரியும். அப்படி, சொல்பவர்கள் நகர்ப்புறத் தேர்தலில் கொங்குமண்டத்தை மட்டுமின்றி, தென் மாவட்டங்களிலும் படுதோல்வியை சந்தித்திருப்பது வேதனை அளிக்கிறது. இரண்டு மாதங்கள் பொறுங்கள்… எல்லாம் நல்ல படியாக நடக்கும்’ என்று நம்பிக்கை வார்த்தைகளை உதித்திருக்கிறார்.

சசிகலாவின் இந்த நம்பிக்கை வார்த்தைகள்தான், மாஜிக்கள் மற்றும் மா.செ.க்கள் ஒருசிலரை தவிர மற்றவர்களின் மனதை மாற்றியிருக்கிறதாம். முக்கிய நிர்வாகிகள் சிலர் சசிகலாவை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறார்களாம். விரைவில் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் இரட்டையர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம்’’ என்றனர்.

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுவது பா.ஜ.க.தான் என்று அண்ணாமலை சொன்னார். அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்மை இல்லை என்று நயினார் நாகேந்திரன் சொன்னார். நகர்ப்புற தேர்தல் முடிவுகளும், பா.ஜ.க.வினர் உதிர்த்த வார்த்தைகளையும் முடிச்சுப் போட்டு, கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு புரியும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal