உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை துவக்கியது. அங்குள்ள முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் சப்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போருக்கு யாரும் குறுக்கே வந்தால் வரலாறு காணாத அழிவை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார். இரு நாடுகள் இடையே போர் துவங்கி இருப்பதால் உலக பொருளாதாரம் பாதிக்கும் என பல நாடுகள் கவலை அடைந்துள்ளன.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விரும்புகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வெளி நாட்டவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போர் நடவடிக்கை துவங்கி விட்டதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் தாக்குதலை துவக்கினர். உக்ரைன் தலைநகரான கியூ மற்றும் கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்க், மைக்கோல், மரியூபோல், ஒடேசா, கார்கிவ் நகரங்களில் பீரங்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.போர் துவங்கி இருப்பதை ஐ.நா.,வுக்கான உக்ரைன் தூதர் செர்ஜி கில்சிஸ்டியா உறுதி செய்துள்ளார். ” ரஷ்ய அதிபர் எனது நாட்டின் மீது போரை பிரகடனம் செய்திருப்பதாக ரஷ்ய ஐ.நா., தூதர் ஒத்து கொண்டார்.” இவ்வாறு செர்ஜி கூறியுள்ளார்.

ரஷ்யாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்றயை போர் துவக்கத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal