கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியது தான் கொங்கு மண்டலம். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியை வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலத்தை குறிவைத்து காய் நகர்த்தினார்.

இன்றைக்கு கொங்கு மண்டலம் தி.மு.க.வின் கோட்டையாக மாற்றிவிட்டது. எந்த தேர்தல் வந்தாலும் கொங்கு மண்டல பகுதி அ.தி.மு.கவின் கோட்டையாகவே இருந்துள்ளது. அதற்கு ஏற்றார் போல 2011 மற்றும் 2016 தேர்தல்களில் தமிழகத்தில் அ.தி.மு.க.வின் ஆட்சி அமைவதற்கு முக்கிய பங்கு வகித்தது கொங்கு மண்டலங்களில் பெற்ற வாக்குகள் தான். 2021 தேர்தலில் அ.தி.மு.க தமிழகத்தின் பிற பகுதிகளில் குறைவான இடங்களில் வெற்றி பெற்று வந்த நிலையில் கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் கைப்பற்றியது. இதேபோல் சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக இடங்களை பிடித்து எதிர்கட்சி அந்தஸ்தில் அமர்ந்தது.

ஆனால் தமிழகத்தில் ஆட்சி அமைத்த தி.மு.க.வால் கோவையில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதனால் சட்டமன்ற தேர்தல் முடிந்த கையோடு உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க. பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவித்ததுமே கொங்கு மண்டலங்களில் தி.மு.க தனிகவனம் செலுத்தியது. தி.மு.க கொங்கு மண்டலத்தை குறிவைத்து பிரசாரங்களை வலுப்படுத்தியது. அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கும் கொங்கு மண்டலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றி காட்டுவோம் என பிரசார களத்தில் பகிரங்கமாகவே சவால் விடுத்தனர்.

அ.தி.மு.க.வும் எப்போதும் போல தங்கள் கட்சியின் எக்கு கோட்டையாக விளங்கும் கொங்கு மண்டத்தில் இதுவரை பெற்ற வெற்றிகளை போன்று இந்த உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி கொடியை நாட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு களப்பணியாற்றியது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்து இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே முன்னிலை வகித்தது. குறிப்பாக இதுவரை அ.தி.மு.க.வின் கோட்டை என வர்ணிக்கப்பட்டு வந்த கொங்கு மண்டலத்திலும் தி.மு.க. கூட்டணியே பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் உள்ளது.

கொங்கு மண்டலத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி கிடைக்காததால் இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கனவோடு பணியாற்றிய தி.மு.க.வினர் இந்த வெற்றியால் உற்சாகத்தில் திளைக்கின்றனர். கொங்கு மண்டலத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளை தி.மு.க.வே கைப்பற்ற கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளை உள்ளடக்கிய கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையான இடங்களை தி.மு.க.வே கைப்பற்றியுள்ளது. தொண்டாமுத்தூர், வேடப்பட்டி, ஆலாந்துறை, தாளியூர் பேரூராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றி விட்டது. இதுபோன்றே மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருக்க கூடிய பேரூராட்சிகளையும் தி.மு.க.வே கைப்பற்ற உள்ளது.

7 நகராட்சியில் முதல் நகராட்சியாக வால்பாறையை தி.மு.க. கைப்பற்றி விட்டது. பொள்ளாச்சி, மதுக்கரை நகராட்சியும் தி.மு.க. கைப்பற்றி விட்டது. இதுபோன்ற மற்ற நகராட்சிகளிலும் தி.மு.க.வே முன்னிலையில் உள்ளது. இதனால் அந்த நகராட்சிகளையும் தி.மு.க.வே கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 16 வார்டுகளுக்கு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 15 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. 50 வார்டுகளை கைப்பற்றினால் மேயரை தி.மு.க. தேர்ந்தெடுக்கும். கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் அனைத்திலும் தி.மு.க.வே வெற்றிகொடியை நாட்ட உள்ளது.

இந்த வெற்றியின் மூலம் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வினருக்கு தி.மு.க. அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது என்றே கூறவேண்டும். கோவையை போல திருப்பூர், சேலம், ஈரோடு போன்ற இடங்களில் தி.மு.க. பெற்ற வெற்றி விவரங்கள் வருமாறு:

திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளக்கோவில், காங்கேயம், பல்லடம், திருமுருகன்பூண்டி, தாராபுரம், உடுமலை ஆகிய 6 நகராட்சிகள் உள்ளன. இதில் 6 நகராட்சிகளில் பெரும்பாலான வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்று 6 நகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. மேலும் மாவட்டத்தில் முத்தூர், மடத்துக்குளம், சாமளாபுரம், கணியூர், அவிநாசி, குன்னத்தூர், ஊத்துக்குழி, மூலனூர், ருத்ராவதி, கொளத்துப்பாளையம், சின்னக்காம்பாளையம், கன்னிவாடி தளி, கொமரமங்கலம், சங்கராமநல்லூர் ஆகிய 15 பேரூராட்சிகளிலும் பெரும்பாலான வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 6 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 10 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. இதனால் சேலத்தை அ.தி.மு.க.வின் கோட்டை என்றே அரசியல் விமர்சகர்கள் கூறினார்கள்.

இதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் அ.தி.மு.க. பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தலில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக தி.மு.க. வெற்றி வாகை சூடி உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி, 31 பேரூராட்சிகளை முழுமையாக தி.மு.க. கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியும் தி.மு.க. வசமாகி உள்ளது. இதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் நகராட்சி, பேரூராட்சிகளில் அதிக வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானி, புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் உள்ளது. இதில் சத்தியமங்கலம் நகராட்சியை தி.மு.க கைப்பற்றியது. மொத்தம் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 18 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 4 இடங்களிலும், பா.ஜனதா 2 இடங்களிலும், பா.ம.க. 2 இடங்களிலும், ஒரு சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 12 வார்டுகளுக்கு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க. 7 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.பவானி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் 7 வார்டுகளுக்கு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க 6 இடங்களிலும், அ.தி.மு.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் 10 வார்டுகளுக்கு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க. 5 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 42 பேரூராட்சிகள் உள்ளன. இதில் பெரியகொடிவேரி பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. இதேபோல் பவானிசாகர் பேரூராட்சியையும் தி.மு.க. கைப்பற்றியது. இதில் தி.மு.க. 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல் அறச்சலூர் பேரூராட்சியையும் தி.மு.க. கைப்பற்றியது. இதில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 11 இடங்களிலும், ம.தி.மு.க. ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 2 இடத்திலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள மற்ற 39 பேரூராட்சிகளிலும் அதிகமான இடங்களில் தி.மு.க.வினர் வெற்றி பெற்றுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal