சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்

இந்த மனு மீதான விசாரணை கடந்த மே 6ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபஸ்.எஸ்.ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறை கால அவகாசம் கேட்ட நிலையில் 15ஆம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் நேற்று விசாரணைக்கு வந்த போது விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது. இதற்கு செந்தில் பாலாஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்தது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை தரப்பில் ஆஜராக வேண்டிய சொலிசிஸ்டர் ஜெனரல் வேறு ஒரு வழக்கில் ஆஜராகியிருந்தார். எனவே வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பு நீதிபதிகளிடம் முறையிட்டது.

அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. செந்தில் பாலாஜி 330 நாள்களுக்கும் மேல் சிறையில் உள்ளார். எனவே மனு மீதான விசாரணையை நாளைய தினத்துக்காகவாவது ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. அத்துடன் ஜூலை 10ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

எனவே செந்தில் பாலாஜி மேலும் சுமார் இரு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் உச்ச நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. அதன் பின்னர் ஜூலை மாதம் தான் விடுமுறை முடியும். விடுமுறை முடிந்து வந்த பின்னரே செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணைக்கு வரும்.

கோடை விடுமுறைக்கு முன்னதாக செந்தில் பாலாஜிக்கு எப்படியாவது ஜாமீன் பெற்று வெளியே கூட்டி வந்துவிட வேண்டும். இல்லை என்றால் இரண்டு மாதங்கள் தடங்கல் ஏற்பட்டுவிடும் என செந்தில் பாலாஜி தரப்பு தீவிரம் காட்டி வந்தது. ஆனால் அமலாக்கத்துறையோ விசாரணையை தொடர்ந்து ஒத்திவைக்க கோரியே வந்தது.

தற்போது ஜூலை மாதம் வரை விசாரணை இல்லை என்பதால் செந்தில் பாலாஜி தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஜூன் 14ஆம் தேதியுடன் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal