நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலை நேர்மையாக நடத்திட வலியுறுத்தி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது பற்றி கோவை மாவட்ட அ.தி.மு.க.வினரிடம் பேசியபோது, ‘‘கோவை மாவட்டத்தில் நேற்றுதான் இளைஞரணி செயலாளர் உதயநிதி கடைசியாக பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற கணக்கில் தேர்தல் வேலை பார்த்து வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியும், கொங்கு மண்டலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார். நாளை வாக்குப் பதிவு நாளன்று எதேனும் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை முன்கூட்டியே அறிந்துதான் எஸ்.பி.வேலுமணி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்றனர்.

இது பற்றி தி.மு.க. தரப்பில் பேசியபோது, ‘‘கோவையில் அ.தி.மு.க. தோல்வியடைவது உறுதி. இந்தத் தோல்வியை திசை மாற்றி விடுவதற்காகத்தான் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு வேண்டுமென்றே தர்ணா போராட்டம் நடத்துகிறது எஸ்.பி.வேலுமணி டீம்’’ என்றனர்.

ஆக, வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளை கோவையில் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal