சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ம.க., பா.ஜ.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடையே 8 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் முற்றுகையிட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை கடைசியாக 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்றியது.

ஆனால் தற்போது சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ம.க., பா.ஜ.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடையே 8 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாக்குகள் கணிசமாக சிதற வாய்ப்பு உருவாகி உள்ளது. இது தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களையும், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களையும் மிரள வைத்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் சுமார் 20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை வாக்காளர்கள் உள்ளனர். சராசரியாக பார்த்தால் ஒவ்வொரு வார்டிலும் சுமார் 30 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த 30 ஆயிரம் வாக்காளர்களில் சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வாக்காளர்கள் வரை தங்களது வாக்குகளை பதிவு செய்ய வாய்ப்புள்ளது. இந்த 20 ஆயிரம் வாக்காளர்களும் 8 கட்சிகளுக்கு பிரிந்து வாக்கு அளிப்பார்கள்.

இதனால் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 5 ஆயிரம் வாக்குகளை பெற்றால்கூட போதும். எளிதாக கவுன்சிலர் ஆகிவிட முடியும். ஆனால் அந்த குறைந்தபட்ச 5 ஆயிரம் வாக்குகளை பெற முடியுமா? என்பதுதான் வாக்குகள் சிதறுவதை பொறுத்து அமையும். கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலின் போது அ.தி.மு.க, வேட்பாளர்கள் பல வார்டுகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றிக்கனியை பெற்றனர்.

குறிப்பாக 1-வது வார்டில் 81 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதுபோல 15-வது வார்டில் 97 வாக்குகள், 148-வது வார்டில் 172 வாக்குகள், 149-வது வார்டில் 192 வாக்குகள், 165-வது வார்டில் 183 வாக்குகள் பெற்று அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதேபோல தி.மு.க. வேட்பாளர்கள் 18-வது வார்டில் 200 வாக்குகள் வித்தியாசத்திலும், 28-வது வார்டில் 223 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்த தடவையும் இதேபோன்று மிக மிக குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் தான் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு வார்டிலும் வாக்குகள் 8 பேருக்கு சிதறுவதால் தனி நபர் செல்வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கட்சி, வேட்பாளரின் தகுதி, பிரசார யுக்தி போன்றவையும் ஒவ்வொரு வார்டிலும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இத்தகைய காரணங்களால் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளில் கடும் போட்டி நிலவுகிறது. வாக்குகள் சிதறும் நிலையில் தி.மு.க. வேட்பாளர்களும், அ.தி.மு.க. வேட்பாளர்களும் வெற்றியை கருத்தில் கொண்டு தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளனர்.

சில வார்டுகளில் அதிக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 20-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் 11 வார்டுகளில் போட்டியில் குதித்துள்ளனர். 190, 192-வது வார்டுகளில் தலா 24 பேர் போட்டியிடுகிறார்கள். 23, 37, 78-வது வார்டுகளில் தலா 22 பேர் களத்தில் உள்ளனர். 38-வது வார்டில் 21 பேர் போட்டியிடுகிறார்கள். 35, 24, 87, 169, 189-வது வார்டுகளில் தலா 20 பேர் வெற்றி கனிக்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் 40 வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 500 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றிக்கனியை எட்டினர். அந்த தேர்தலின் போது சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் கணிசமான வாக்குகளை குவித்ததால் இந்த நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க. கட்சிகள் வாக்குகளை பிரிக்க உள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்துக்கு சென்னையில் சுமார் 1.5 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இவர்களது வாக்குகளும் கட்சி வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை முடிவு செய்வதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதனால் சென்னை மாநகராட்சி தேர்தல் பிரசாரமும், கள நிலவரமும் உச்சகட்ட பரபரப்பை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal