திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் முதல் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக மதுரை முழுவதும் திடீரென போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை நாளில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்தாண்டு உத்தரவிட்டார். இவரது உத்தரவுக்குப் பிறகே, தீபத்தூண் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. மேல்முறையீட்டில் அவரது உத்தரவு உறுதி செய்யப்பட்டது. பின்னர் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் இந்தாண்டு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. இதனால் தீபத்தூணில் இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்படும் விவகாரத்தில் தற்போது வரை குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என கடந்த ஆண்டு முதல் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக, மதுரை முழுவதும் நேற்று திடீரென போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
திருப்பரங்குன்றம் வழக்கறிஞர்கள் என்ற பெயரில், நீதிபதியின் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில், ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கிய நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு மனைவியுடன் சென்று நீதிபதி சாமி தரிசனம் செய்த நிலையில், இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், நீதிபதியின் பெயருக்கு களங்கம் உருவாக்கும் வகையில் வழக்கறிஞர்கள் என்ற பெயரில் முகவரி இல்லாமல் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். திருப்பரங்குன்றம் வழக்கறிஞர்களிடம் விசாரித்தபோது நாங்கள் யாரும் போஸ்டர்கள் அச்சடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 2025-ல் தீர்ப்பளித்த நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்து தற்போது போஸ்டர் ஒட்டியது ஏன்? எனக் கேள்வி எழுகிறது. எனவே முகவரியின்றி போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
